• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நண்பனுக்காக சொன்ன வாக்கை காப்பாற்றிய எம்ஜிஆர்

சினிமா

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்தார், கலைஞர் கருணாநிதி 1967-ல் பேரறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்துக்குள் மறைந்து விடுகிறார். இந்த நிலையில் தேர்தலே இல்லாமல் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி எழுகிறது. செயற்குழுவும், பொதுக்குழுவும், கட்சியின் அனைத்து அமைப்புகளும் நாவலர் நெடுஞ்செழியனை முதல்வராக்க முடிவெடுத்தது.

இந்த நிலையில் தன்னுடைய பேச்சால், எழுத்தால் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கும் கலைஞர்,கருணாநிதி தனக்குத் தான் முதல்வர் நாற்காலி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நடந்தது வேறாகிவிட்டது. கீழ்க்கோர்ட்டில் அளித்த தீர்ப்பு, மேல் கோர்ட்டில் மாற்றி அமைக்கப்படும் என்கிற சூட்சுமம் தெரிந்த அரசியல் சாணக்கியர் கருணாநிதி, உடனே மூதறிஞர் ராஜாஜியை சந்தித்தார். அவரிடம் தனக்கு இருக்கிற தகுதிகளையும், அதன் விளைவாக எழுந்த எண்ணத்தையும் எடுத்துச் சொல்கிறார். அதற்கு ராஜாஜி, ‘உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் தாமதிக்காமல்

எம்.ஜி. ராமச்சந்திரனைப் போய் பார்’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். ராஜாஜியின் ராஜதந்திரப்படிக் கலைஞர், கருணாநிதி ,எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து, “எனது பேச்சும் மூச்சும்-தமிழ், தமிழ் என்றுதானே ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனது மனைவி மக்களை மறந்து, இரவு–பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன். அது மட்டுமில்லாமல் நான் நிலச்சுவான் தார்களின் பிடியில் சுழன்று கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்திருக்கிறேன். எனவே, அந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக முதல்வர் நாற்காலியில் ஒரே ஒரு நாள் நான் அமர்ந்தால், பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கே பெருமையல்லவா?” என்று கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆரிடம் சொல்கிறார்.

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர்., “எவர் கேட்டு நான் இல்லையென்று சொல்லியிருக்கிறேன். இன்று நீ கேட்டா மறுக்கப் போகிறேன்? ஆனால் நீ கேட்டது பொன்னோ, பொருளோ அல்ல; அள்ளிக் கொடுத்து விட! நீ கேட்டது கர்ணனின் கவச குண்டலம் அல்லவா!” – இப்படி கூறிய எம்.ஜி.ஆர். ஒருநிமிடம் யோசித்தார் அடுத்த விநாடியே, “நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்…” என்று கலைஞர் கருணாநிதிக்கு வாக்குக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்.

அதற்குப்பிறகு, அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்குப்போன் செய்து, “ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு…” என்று சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார். எம்.ஜி.ஆர். மக்கள் திலகம் சாப்பிட அழைத்தாலோ அல்லது தான் சாப்பிட வருகிறேன் என்றுசொன்னாலோ – அதில் ஒரு சரித்திர நிகழ்வு புதைந்து கிடக்கும். இதைப்புரிந்து வைத்திருந்தவர், இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன்.எம்.ஜி.ஆர். தன் வீட்டிற்குச் சாப்பிட வருவதைத் தன் தாயிடம் தெரிவித்து, வள்ளலுக்குப் பிடித்ததைச் செய்யச் சொல்கிறார் இலட்சிய நடிகர். சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு இலட்சிய நடிகரின் இல்லம் வந்தார், எம்.ஜி.ஆர். இலை போட்டுவிட்டு – இன் முகத்துடன் இலட்சிய நடிகரின்தாய், சமையல் கட்டிலிருந்து பதார்த்தங்களை ஒவ்வொன்றாக எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்தார்.

இந்த நேரத்தில் இலட்சிய நடிகர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆரிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னதால், ஏதோ விஷயம் இருக்கும்…. என்னன்னு சொல்லுங்க….!” என்றார். அப்பொழுதுதான் எஸ்.எஸ்.ராஜேந்திரனிடம், “கலைஞர் கருணாநிதி முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று எம்.ஜி.ஆர். விளக்கினார். அதற்கு இலட்சிய நடிகர் நிறைய விளக்கம் அளித்து, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் அவசியம் செய்தாக வேண்டுமா என்றார்?

எந்த விளக்கமெல்லாம் எனக்குத் தேவையில்லை! எனக்காக இதைச் செய்கிறாயா? இல்லையா?’ என்று கடிந்தும் கேட்காமல், இலட்சிய நடிகர் எதைச் சொன்னால் இளகுவார் என்று தெரிந்த எம்.ஜி.ஆர்., “நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா” என்கிறார் அவ்வளவு தான்; இலட்சிய நடிகர் வீழந்து விடுகிறார்!“சரி நீங்க சாப்பிடுங்க..” கவிதையாய் ஒப்புதல் அளித்தார் இலட்சிய நடிகர்.!!!.

VR S Selvendhiran
 

Leave a Reply