கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் சமிக்கையை மீறி, சட்டவிரோத மணலுடன் பயணித்திருந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு பொலிசாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயதுடைய சிறுவன் உயரிழந்திருந்தமையும் குறிப்பிடதக்கது.
இந்நிலையில் நேற்றிரவு கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திரங்களை, விசேட அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்திய போதும் சமிக்கையை மீறி சென்றமையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே இந்த சுற்றிவளைப்பு நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டதுடன் துப்பாக்கிப் பிரயோகமும் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது, விசேட அதிரடிப்படை வீரர், உழவு இயந்திரத்தில் மோதுண்டிருந்தாகவும் தற்போது கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உழவு இயந்திர சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


