TamilsGuide

பிரிட்டனில் கடைக்குள் கத்தியுடன் புகுந்த நபர் வாடிக்கையாளர் மீது கொடூர தாக்குதல்

பிரிட்டனின் கென்ட் மாகாணத்தில் உள்ள சாதம் (Chatham) பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடைக்குள், கத்தியுடன் புகுந்த நபர் ஒருவர் அங்கிருந்த வாடிக்கையாளர் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது கடையில் ஒரு தாயும் அவரது குழந்தைகளும் இருந்த நிலையில், அவர்கள் கண்முன்னேயே இந்த வன்முறை அரங்கேறியது. கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடத்திய நபர் 59 வயதான மைக்கேல் டக்கர் (Michael Tucker) என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கும் இவருக்கும் இடையே ஏற்கனவே இருந்த தனிப்பட்ட பகையே இந்த மோதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

டக்கர் கத்தியுடன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்த நபர், அங்கிருந்த பொருட்களைக் கொண்டு தற்காத்துக் கொள்ள முயன்றார். இருப்பினும், இந்த மோதலில் அவரது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மைக்கேல் டக்கர் மீது கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் பொது இடத்தில் ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மெய்ட்ஸ்டோன் (Maidstone) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, நீதிபதி அவருக்கு 37 மாதங்கள் (சுமார் 3 ஆண்டுகள்) சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட நபரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அணுகக் கூடாது எனத் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
 

Leave a comment

Comment