• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குரலற்றவர்களின் குரலொன்று ஓய்ந்தது

அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளரான ஜெசி ஜக்சன் தனது 84ஆவது வயதில் மரணத்தைத் தழுவி உள்ளார். கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போரடிய மார்ட்டின் லூதர் கிங் அவர்களுடன் ஒரு காலத்தில் சேர்ந்து களமாடிய அவர், 1968 ஏப்ரல் 4ஆம் திகதி மெம்பிஸ் நகரில் கிங் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட சமயத்தில் அவருடன் உடனிருந்தவர் என்பது தெரிந்ததே. நீண்ட காலமாக நோய்வாய்ப் பட்டிருந்த அவர் பெப்ரவரி 17ஆம் திகதி இயற்கை எய்திய தகவல் வெளியாகிய உடன், அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள் உட்பட பலரும் தங்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டு இருந்ததைப் பார்க்க முடிந்தது. தங்கள் செய்திகளில் மனித உரிமைகளுக்காகவும், கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகவும் ஜக்சன் மேற்கொண்ட முயற்சிகளை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
 

1941 அக்டோபர் 8இல் பிறந்த ஜக்சன், மார்ட்டின் லூதர் கிங்கைப் போலவே ஒரு கிறிஸ்தவ மத குருவாக விளங்கினார். தென் கரோலினா மாநிலத்தின் கிறின்வில் எனும் நகரில் பிறந்த அவர் 1954 முதல் 1968 வரை அமெரிக்காவில் பிரபலம் பெற்றிருந்த 'சிவில் உரிமைகள் இயக்கத்தில்' தன்னை இணைத்துக் கொண்டார். ஆபிரிக்க அமெரிக்கர்கள் என அறியப்படும் கறுப்பின மக்கள், நில அடிப்படையில் ஒதுக்கப்படுவதையும், வாக்களிப்பு உரிமை மறுக்கப்படுவதையும்,  அவர்களுக்கு எதிராக பொதுவில் பாரபட்சம் காட்டப்படுவதையும் இந்த அமைப்பு கடுமையாக எதிர்த்துப் போராடியது. 1965ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட, வரலாற்றில் 'செல்மா முதல் மொன்ற்கோமரி பேரணி' என அறியப்பட்ட நிகழ்வில் இவரும் கலந்து கொண்டு பிரபலம் பெற்றார். அலபாமா மாநிலத்தில் நடைபெற்ற 87 கிலோ மீற்றர் நீளமான இந்தப் பேரணி மார்ச் 7 முதல் 25 வரை 19 நாட்கள் நீடித்தது.
 
முன்னதாக லீ ஜிம்மி ஜக்சன் என்ற இளைஞர் பெப்ரவரி 18ஆம் திகதி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். வாக்குரிமை கோரி நடத்தப்பட்ட சாத்வீகப் போராட்டங்களில் பங்கு கொண்டிருந்த நிலையில் படையினரின் தாக்குதலுக்கு இலக்கான இந்த இளைஞர் பின்னர் சுடப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 8 நாட்களின் பின்னர் இவர் மரணத்தைத் தழுவினார். இறக்கும் போது அவருக்கு வயது 26. இந்த மரணமே 'செல்மா முதல் மொன்ற்கோமரி பேரணி'க்கு வித்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்து.

பேரணியில் பங்கு கொண்ட ஜக்சனின் திறமையைக் கண்டுணர்ந்த கிங் உள்ளிட்ட தலைவர்கள் ஜக்சனை புதிய பொறுப்புக்கு நியமித்தனர். 'ரொட்டிக் கூடை நடவடிக்கை'  ( Operation Breadbasket  ) என்ற பெயரில் 1966 பெப்ரவரி 11இல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் அமெரிக்காவில் வசிக்கும் கறுப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. அது மாத்திரமன்றி, கறுப்பின மக்களின் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் அதேவேளை, கறுப்பினத்தவர்களைப் பணிக்கமர்த்த மறுக்கும் வெள்ளையர்களின் வர்த்தக நிறுவனங்களைப் புறக்கணிப்பதையும் இலக்காகக் கொண்டிருந்தது.
 
1967ஆம் ஆண்டில் மிகவும் தீவிரமாகச் செயற்பட்ட அந்த இயக்கம் அந்த ஆண்டில் மாத்திரம் 40 பகிஸ்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், 8,000 வரையான கறுப்பினத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்தது. கிங் அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து படிப்படியாக இந்த இயக்கம் வலுவிழக்கத் தொடங்கியது. 1971 டிசம்பரில், சிவில் உரிமைகள் இயக்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜக்சன் விலகிக் கொண்டார். பின்னர் புதியதொரு தலைமையின் கீழ் இந்த இயக்கம் குறுகிய காலமே செயற்பட்டது. எனினும் ஜக்சனின் தலைமையில் குறிப்பிட்ட காலப் பகுதியினுள் இந்த இயக்கம் அமெரிக்க சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. இதன் பின்னணியில் செயல்பட்ட ஜக்சனின் பங்களிப்பு மறுக்கப்பட முடியாதது.

சிவில் உரிமைகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய ஜக்சன், 1971 டிசம்பர் 25இல் 'மனிதத்தைக் காப்பதற்கான ஐக்கிய மக்கள்' இயக்கத்தைத் தோற்றுவித்தார். கறுப்பின மக்களதும், விளிம்பு நிலையில் வசிக்கும் ஏனைய இன மக்களதும் பொருளாதார மேம்பாட்டுக்காக அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் தரும் செயற்பாடுகளை அவர் இந்த அமைப்பின் ஊடாக முன்னெடுத்தார்.
 
1984ஆம் ஆண்டில் மனிதத்தைக் காப்பதற்கான ஐக்கிய மக்கள் இயக்கத்தின் தலைமைப் பதவியைத் துறந்த ஜக்சன் 'வானவில் கூட்டணி' எனும் பெயரிலான புதிய இயக்கத்தை ஆரம்பித்து தேர்தல் அரசியலுக்குள் பிரவேசித்தார். 1984 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட இவர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் போதிய ஆதரவு கிட்டாததால் அவரால் போட்டியிட முடியாமல் போய்விட்டது. எனினும், இவரது முயற்சிகளே பின்னாளில் அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்வு செய்யப்படக் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜக்சன் தொடர்பான தனது நினைவுக் குறிப்பில் பராக் ஒபாமா அவர்களும் இந்த விடயத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து இருப்பதைப் பார்க்க முடிகின்றது.

ஜக்சன் என்ற ஒரு தனி மனிதனின் வாழ்க்கையானது ஒரு காலகட்டத்தின் வரலாறு. இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்க வரலாறில் அவரது பெயர் தவிர்க்க முடியாத ஒன்று. அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த இருண்ட யுகம் ஒன்றை முடித்து வைத்ததில் அவரது வகிபாகமும் உண்டு. தற்போதைய அமெரிக்காவில், உரிமை பெற்ற மக்களாக, ஓரளவேனும் சமமாக மதிக்கப்படும் மக்களாக கறுப்பின மக்களும், ஏனைய சிறுபான்மை மக்களும் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்ட முன்னோடிகளுள் ஜக்சனது பெயரும் நிச்சயம் அடங்கும். அன்றைய காலகட்டத்தில் ஜக்சனுடன் தோளோடு தோள் நின்று போராடிய தோழர்களும், இன ஒதுக்கல் கொள்கையால் பாதிக்கப்பட்ட மக்களும் ஜக்சன் போன்றோரின் தன்னலமற்ற சேவைகளை மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

அன்றைய காலகட்டத்தில் ஜக்சன் போன்ற தலைவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள், நடவடிக்கைகள் சாத்வீகமானவையாகவே இருந்த போதிலும் அவர்கள் வன்முறையை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலேயே இருந்தார்கள். அரச இயந்திரம் மாத்திரமன்றி, வெள்ளை நிறவெறிக் குழுக்களும் கூட கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதில் கரங்கோர்த்துச் செயற்பட்டன. மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கலாக பலர் கொல்லப்பட்டனர். பலர் கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஆளாகினர்.

தற்கால உலகில் ஓரளவேனும் உரிமை பெற்றவர்களாக மக்கள் வாழ்கிறார்கள் என்றால், கடந்த காலத்தில் எமது முன்னோர்கள் அந்த உரிமைகளுக்காக இரத்தம் சிந்திப் போராடி உள்ளார்கள் என்பதே அர்த்தம். இது இன உரிமையாக இருந்தாலும், பெண் உரிமையாக இருந்தாலும், இன்றும் கூட உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அங்கீகாரம் பெற முடியாமல் உள்ள மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமையாக இருந்தாலும் அவை அதிகார வர்க்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை அல்ல என்பதை இன்றைய இளைய தலைமுறை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். உலகெங்கும் உரிமை வேண்டிப் போராடிய முன்னோடிகளின் வரலாறு எமக்கெல்லாம் பாடமாக இருக்க வேண்டும். கடந்த காலத்தின் இருண்ட யுகத்துக்கு மீண்டும் திரும்பி விடாமல் இருக்கவும், நிகழ் காலத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் இது மிகவும் முக்கியம்.

உரிமைக்கான குரல்கள் தேசங்களின், நாடுகளின் எல்லைகளுக்குள் மட்டுப்பட்டு நின்று விடுவதில்லை. அவை எல்லைகளைக் கடந்தும் எதிரொலிக்கக் கூடியவை. அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவில் குரலற்றவர்களாக வாழ்ந்த கறுப்பின மக்களின் குரலாக எழுந்த ஜக்சன் போன்றோரின் குரல்கள் அமெரிக்காவில் வாழ்ந்த மக்களைத் தட்டியெழுப்பியது மாத்திரமன்றி, உலகெங்கும் வாழ்ந்த உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கும் உத்வேகத்தை வழங்கியது. அந்த வகையில் ஜெசி ஜக்சன் போன்றோர் அமெரிக்க மக்களின் தலைவர் மாத்திரமல்ல, உலக மாந்தர் அனைவருக்குமான தலைவர் என்றே போற்றப்பட வேண்டும். 

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a Reply