திரையுலகின் இமயமாய், நவரசத்தின் பிறப்பிடமாய் விளங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் ஒரு நடிப்புக் கடல் என்றால், அவரோடு மோதிய நடிகைகள் அந்தக் கடலில் அலைகளாய் எழும்பி, தங்களின் திறமையால் கரையைத் தொட முயன்றவர்கள். "சிவாஜிக்கு முன்னால் நிற்கவே பயமாக இருக்கிறது" என்று பல ஜாம்பவான்கள் நடுங்கிய காலத்தில், அவருக்கு நிகராக நின்று, கண்கள் சிவக்க, வசனங்களால் சாட்டையடி கொடுத்து, திமிரும் தேஜஸும் காட்டிய அந்தப் பெண் சிங்கங்களின் கலைப் பயணம் ஒரு தீராக் காவியம். அன்பால் அமைதியானவர்களை விட, மோதலால் முத்திரை பதித்த அந்த 'வில்லி'யத்தனம் கலந்த நடிப்புச் சுடர்களை இங்கே காண்போம்.
அரியாசன மோதல்கள்: பானுமதி முதல் கே.ஆர். விஜயா வரை
பானுமதி (தெனாலிராமன்): சிவாஜியை எதிர்த்து நின்ற முதல் பெருமைமிகு 'வில்லி' பானுமதி அவர்கள். ஒரு பேரரசின் சதிகாரியாக, அறிவுக் கூர்மை மிக்க தெனாலிராமனை வீழ்த்த அவர் தீட்டிய திட்டங்கள் ஒவ்வொன்றும் நடிப்புப் போரின் உச்சம்.
சுகுமாரி (பட்டிக்காடா பட்டணமா): மூக்கையாவாக வாழ்ந்த சிவாஜிக்கு, அந்தக்கால 'நீலாம்பரி'யாகத் திகழ்ந்தவர் சுகுமாரி. மருமகனையே ஆள் வைத்து அடிக்கும் திமிரும், அலட்சியமான பார்வையும் இன்றும் நெஞ்சை உறைய வைப்பவை.
கே.ஆர். விஜயா (சரஸ்வதி சபதம்): மென்மையான புன்னகைக்குச் சொந்தக்காரரான இவர், மமதை பிடித்த அரசியாக வித்யாபதியை இம்சை செய்தபோது, கலை உலகம் வியந்து நின்றது. தனக்கென வந்த விஜயாவின் ஆணவ நடிப்பை ஏ.பி. நாகராஜன் செதுக்கியிருப்பார்.
அகந்தை அனலாகத் தெறித்த தருணங்கள்
ஜெயலலிதா (சவாலே சமாளி): சண்டிக் குதிரையாகச் சீறிய ஜெயலலிதா, நாயை ஏவி விடுவதும், துணிகளைத் துவைக்கச் சொல்லி ஏளனம் செய்வதும் எனச் சிவாஜியுடன் மோதிய ஒவ்வொரு காட்சியும் அனல் பறப்பவை.
ராஜசுலோசனா (படித்தால் மட்டும் போதுமா): படிக்காத கணவனை தனது ஏளனப் பேச்சால் வெறுப்பை விதைத்தவர் ராஜசுலோசனா. அந்த மோதலில் உருவான உணர்ச்சிக் குவியல்கள் இன்றும் திரையுலகின் பாடம்.
வடிவக்கரசி (முதல் மரியாதை): ஒரு முதிர்ந்த கலைஞனுக்கு இணையாக, நாராசமான சொற்களால் ஊரறியத் திட்டித் தீர்த்த வடிவக்கரசியின் நடிப்பு, அசல் கிராமத்து ஆக்ரோஷத்தின் சாட்சி.
உணர்ச்சிக் காவியங்கள் மற்றும் இறுதி மோதல்கள்..
சரிதா (கீழ்வானம் சிவக்கும்): இதில் மோதல் என்பது சந்தேகத்தால் விளைந்தது. பேசாமல் பேப்பரில் எழுதிப் பேசும் அந்த மௌனப் போராட்டத்திலும், 'கண்கண்ட தெய்வமே' பாடலிலும் சரிதா சிவாஜிக்கு இணையாக கலை ரசம் சொட்டப் பாடம் நடத்தியிருப்பார்.
மஞ்சுளா (முதல் குரல்): நடிகர் திலகத்துடன் திரையில் மோதிய கடைசிப் பெண் சிங்கம் மஞ்சுளா அவர்கள். ஆரம்பகால நாயகியாகப் பார்த்த மஞ்சுளாவா இது என வியக்கும் வண்ணம் தன் வில்லித்தனத்தால் அதிரவைத்திருப்பார்.
இந்த மோதல்கள் வெறும் நடிப்பு அல்ல; ஒரு மகா கலைஞன் தனக்கு முன்னால் நிற்பவர்களுக்குக் கொடுத்த ஊக்கம். "நம்மால் முடியுமா?" என்று தயங்கிய நடிகைகளுக்குத் தானே நடிப்புச் சொல்லிக் கொடுத்து, அவர்களைத் தனக்கு எதிராகச் சீறச் செய்த அந்தப் பேராசானின் பெருந்தன்மைக்குச் சான்று இந்தப் படங்கள். இதனாலும் நடிகர் திலகம் எனும் வைரம் இன்னும் பிரகாசமாக ஜொலித்தது.
செந்தில்வேல் சிவராஜ்.


