முத்தமிழின் மூச்சாக, நடிப்புலகின் திசையெட்டாகத் திகழும் செந்நாப் புலவன் சிவாஜி கணேசன்..
முத்தமிழின் மூச்சாக, நடிப்புலகின் திசையெட்டாகத் திகழும் செந்நாப் புலவன் சிவாஜி கணேசனின் திரைப்பீடத்தில், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' மற்றும் 'ராஜ ராஜ சோழன்' ஆகிய இரு பெருங்காவியங்களும் கங்கையும் காவிரியும் போலப் பிரவாகமெடுக்கின்றன.
பாஞ்சாலங்குறிச்சி எனும் சிறு நிலப்பரப்பில், பாரதத் தாயின் அடிமைத்தளையை அறுக்க முற்பட்ட ஒரு வேங்கையின் சீற்றம் 'வீரபாண்டிய கட்டபொம்மன்'. இதில் நடிகர் திலகம் காட்டியது 'ரௌத்திரம் பழகு' எனும் சொல்லுக்கான நேரடிப் பொருள்.
அங்கே அவர் பேசிய வசனங்கள் வெறும் சொற்களல்ல; அவை அந்நிய ஏகாதிபத்தியத்தின் நெஞ்சைப் பிளந்த ஈட்டிகள். "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது" என அவர் இடியென முழங்கியபோது, ஒரு பாளையக்காரனின் மான உணர்வு இமயமலையாய் ஓங்கி நின்றது.
கயத்தாறு தூக்குமேடை நோக்கி அவர் நடந்த அந்த நடை, மரணத்தைச் சிறு புல்லெனக் கருதிய ஒரு மாவீரனின் 'அஞ்சாமை'. கண்ணீர் மல்க அவர் விடைபெற்றபோதும், விழிகளில் மின்னிய அந்தத் தேசப்பற்று, எரிமலைக் குழம்பாய் திரையில் வழிந்தது. அது ஒரு தனிமனிதனின் தன்மானப் போர்; ஆவேசத்தின் உச்சம்!
அதே கைகள், அதே குரல், அதே விழிகள்... ஆனால் 'ராஜ ராஜ சோழன்' திரைப்படத்தில் நாம் காண்பது 'அருளொடும் அன்போடும் வரும் பொருள்' ஈட்டிய ஒரு பேரரசனின் கம்பீரம். கட்டபொம்மனில் தெரிந்த தெறிப்பு, இங்கே தேனொழுகும் பக்தி பண்பாடாய் மாறியது.
தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தின் நிழலில், கலைகளின் காவலனாக அவர் நின்றபோது, அது வெறும் நடிப்பல்ல; ஒரு இனத்தின் முகவரியை மீட்டுருவாக்கம் செய்த பேரறம். அங்கே அவர் பேசிய தமிழ், சந்தப் பாடலாய் இனித்தது. சிற்பிகளிடம் அவர் காட்டிய கனிவும், போர்க்களத்தில் அவர் காட்டிய நுட்பமான ராஜதந்திரமும், ஒரு பேரரசன் என்பவன் 'இறைமாட்சி' மிக்கவன் என்பதைப் பறைசாற்றியது.
கட்டபொம்மன் ஒரு சீறும் புலி என்றால், அருண்மொழிவர்மன் ஒரு நிதானமான, ஆனால் உலகையே ஆளும் வல்லமை கொண்ட சிங்க ஏறு!
கட்டபொம்மனில் தமிழ் 'வாளாகச்' சுழன்றது; சோழனில் தமிழ் 'மகுடமாகச்' சூடப்பட்டது.
ஒன்றில் துடிப்பு மிக்க வீரம்; மற்றொன்றில் நிமிர்ந்த நன்னடை கொண்ட விவேகம்.
கட்டபொம்மன் வஞ்சிக்கப்பட்ட வீரத்தின் கண்ணீர்; சோழன் நிலைநாட்டப்பட்ட அறத்தின் புன்னகை.
ஒப்புமை என்று பார்த்தால், இவ்விரண்டு பாத்திரங்களுக்கும் உயிரூட்டிய அந்த 'மகா கலைஞன்' ஒருவரே! தமிழ் உச்சரிப்பின் தூய்மையும், கண்கள் வழி உணர்வுகளைக் கடத்தும் வித்தையும் இவ்விரு காவியங்களிலும் குன்றாத சுடராய் எரிகின்றன.
கட்டபொம்மனாக அவர் தூக்குமேடை ஏறும்போது நம் வீரம் துடிக்கிறது; சோழனாக அவர் செங்கோல் ஏந்தும்போது நம் பெருமை சிலிர்க்கிறது. ஒரு கலைஞன், ஒரு பிறவியில் இருவேறு வரலாற்று நாயகர்களைத் தமிழ் மண்ணின் ஆன்மாவோடு பொருத்திப் பார்ப்பது என்பது எட்டாக்கனி. அதைத் தன் நடிப்புத் திறத்தால் எட்டிப் பிடித்தவர் சிவாஜி கணேசன்.
செந்தில்வேல் சிவராஜ்..





















