பராசக்தி வெளிவந்து சிவாஜி உச்சகட்டப் புகழைப் பெற்ற காலகட்டத்தில் தான் நான் சென்னைக்கு வந்தேன். பெரம்பூர் டவுன் ஹால் சேவா ஸ்டேஜின் நாடகம் ஒன்றில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்த போது, ஒரு ரசிகனாய் நான் அவரை முதன்முதலில் தூரத்தில் இருந்து பார்த்தேன்.
பிறகு எனது நாடகக் குழு சார்பில் 'நெஞ்சின் அலைகள்' நாடகத்தைச் சிவாஜி தலைமையில் பார்த்தசாரதி கான சபாவில் நடத்தினேன். பிறகு கே. பாலச்சந்தரின் 'ராகினி கிரியேஷன்ஸ்' சார்பில் சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த் போன்ற புகழ் பெற்ற நாடகங்கள் நடந்தபோது, சிவாஜி பார்த்து ரசித்தார்.
இந்தச் சூழலில் 'வியட்நாம் வீடு' படம் தயாராகியது. அதில் சிவாஜிக்கு மகனாய், ஒரு பிராமண இளைஞனாய் நடிக்க நான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். சிவாஜியோடு எனக்கு அதுதான் முதல் படம். கடைசியாக வெளிவந்தது 'இளைய தலைமுறை'யாக இருக்கலாம்.
வியட்நாம் வீடு படத்தில் நடித்த பிறகு சிவாஜி மீது எனக்கு மிக அதிகமான ஈடுபாடு ஏற்பட்டது. சிவாஜியும் சரி, நானும் சரி, காமராஜர் மீது மிக அதிகமான பற்றும் மரியாதையும் வைத்திருந்தோம். காமராஜரே எங்களின் நெருக்கத்திற்கு மூலக்காரணம் என்று சொல்லலாம். இதனால் அரசியல் மேடைகளில் அன்றாடம் காமராஜர் புகழ் பாடிப் பேசுவதும், சிவாஜியுடன் நடிப்பதும் ஒரே காலகட்டத்தில் எனக்கு நேர்ந்தது.
சிவாஜியின் ரசிகர்கள் என்னை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். அதனால்தான் தமிழகமெங்கும் சிவாஜி ரசிகர் மன்றக் கிளைகளை நான் திறந்து வைத்தேன். என்னோடு பிரேம்குமார், காலஞ்சென்ற நடிகர்கள் சசிகுமார், சுருளிராஜன் ஆகியோரும் சிவாஜி மன்றத் திறப்பு விழாக்களில் பங்கேற்பார்கள். இப்படியாக மதுரையில் மட்டும் 200-க்கும் அதிகமான சிவாஜி ரசிகர் மன்றங்களை நானே திறந்து வைத்திருக்கின்றேன்.
சிவாஜி ரசிகர் மன்றங்களைத் திறந்து வைக்க நான் விதித்த ஒரே நிபந்தனை: 'சிவாஜி ரசிகர் மன்றத்திற்கு அருகிலேயே புதிதாக காமராஜர் நற்பணி மன்றத்தையும் ரசிகர்கள் திறந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்பதுதான். அப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சியை வளர்த்தோம். அப்போதெல்லாம் சிவாஜி ரசிகர் மன்றத்தில் காங்கிரஸ் கொடிதான் பறக்கும்.
எனது நண்பர் நடிகர் சசிகுமார் விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது இரங்கல் கூட்டத்தில் காமராஜர் கலந்து கொண்டார். சிவாஜியும் நானும் ஒரே காலகட்டத்தில் சேர்ந்து படங்களில் நடித்துக்கொண்டு, மாலையில் காங்கிரஸ் கூட்டங்களில் சேர்ந்து பேசினாலும், செட்டில் சிவாஜி என்றுமே அரசியல் பற்றி என்னிடம் பேசியதே இல்லை. பேசவும் மாட்டார்.
சினிமா செட்டில் அவர் ஒரு நடிகர். அரசியல் மட்டுமல்ல, அநாவசியமாகக் கூட எதையும் பேசமாட்டார். தன்னோடு நடிக்கும் சிறிய நடிகர்கள் கூட நன்றாக நடிக்க வேண்டும் என்று விரும்புவார். அவர்கள் நடிப்பில் தப்பு இருந்தால், 'இப்படிப் பண்ணினால் நல்லாயிருக்கும்' என்பார். தனது பாணியிலேயே மற்றவர்களும் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார். எதையும் யார் மீதும் திணிக்க மாட்டார். யாரைப் பற்றியும் வம்பாக, அசிங்கமாகப் பேசமாட்டார்.
தான் நடித்த படங்களில் கூட கதை, பாடல், கதாபாத்திரம், காட்சி அமைப்பு இடம் கொடுத்தால்தான் தனது காங்கிரஸ் இயக்கக் கருத்துகளையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்துவார்.
சிவாஜியோடு நான் நடித்த பல படங்கள் நன்றாக ஓடின. கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருந்ததால்தான் என்னை நடிக்க அழைப்பார். சில படங்களில் மிகச் சிறிய வேடங்களில் கூட சிவாஜியுடன் நடித்திருக்கிறேன்.
எனது சொந்தப் பெயர் வெங்கட்ராமன். என்னைச் சொந்தப் பெயரிலேயே 'வெங்கடா' என்றுதான் கூப்பிடுவார். சிவாஜியோடு நடித்தவர்களில் எனக்குப் பின்பும் நிறைய பேர் நடித்தார்கள் என்றாலும், யாரும் என் அளவு சோபிக்கவில்லை.
வியட்நாம் வீடு, ஞான ஒளி, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப் பதக்கம், அவன் ஒரு சரித்திரம் போன்ற பல படங்கள் சிவாஜியுடன் எனக்கு நல்ல புகழைத் தேடித்தந்தன. அவர் எனது 'ராஜநாகம்' படத்தைப் பிரீவியூவில் (Preview) பார்த்துப் பாராட்டியிருக்கிறார்.
அவரது 'களம் கண்ட கவிஞன்' நாடகம் முழுக்க முழுக்க சங்க இலக்கியப் பாடல்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. அப்படி ஒரு நடிப்பும் வசன உச்சரிப்பும் அதில் இருக்கும். அந்த மாதிரி யாராலும் நடிக்க முடியாது.
சிவாஜியை நான் கடைசியாகச் சந்தித்தது 'ஒன்ஸ் மோர்' (Once More) பட சூட்டிங்கில் தான். ஏ.ஆர்.எஸ் (ARS) கார்டனில் நானும் சித்ராலயா கோபு, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் டிவி சீரியலில் (TV Serial) பங்கேற்றுக் கொண்டிருந்தோம். சிவாஜி அங்கு மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்க வந்திருப்பதால், சென்று பார்த்துப் பேசிக் கொண்டிருந்தோம்.
பல ஆண்டுகள் 'ஓஹோ' என்று புகழப்பட்ட பல வெற்றிகள் குவித்த ஹீரோவாய் இருந்தும், சிவாஜி எந்தச் சினிமாவையும் டைரக்ட் செய்ய ஆசைப்பட்டதில்லை. நடிப்பதில்தான் அவருக்கு முழு ஈர்ப்பும் இருந்தது.
கர்மவீரர் காமராஜரின் தொண்டனாக சிவாஜி அரசியலில் ஈடுபட வேண்டி வந்தது. காங்கிரஸ் தமிழ்நாட்டில் சிவாஜியைக் கறிவேப்பிலையாய் பயன்படுத்திக் கொண்டு பின்பு தூக்கி எறிந்தது. காமராஜரின் கொள்கைகளை முழக்கம் செய்யவும், காங்கிரஸில் தன்னை எதிர்த்தவர்களை எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திலும்தான் சிவாஜி தனிக்கட்சி ஆரம்பித்தார்.
'வெளுத்ததெல்லாம் பால்' என்று நினைக்கக்கூடியவர் சிவாஜி. சிவாஜியால் பல காரியங்களைச் சாதித்துக்கொண்டவர்கள் தலைவரானார்கள், எம்.எல்.ஏ, எம்.பி ஆனார்கள். ஆனால் சிவாஜியோ இந்தச் கபட அரசியல்வாதிகளால் பெரும் துன்பத்தைத்தான் அடைந்தார். சிவாஜி எந்தக் கட்சிகளிலும் சேராமல் இருந்திருந்தால் இன்னும் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ்ந்திருப்பார் என்பதே எனது கருத்து.
காங்கிரஸுக்காக வேலை பார்த்துத் தங்கள் வாழ்க்கையையே இழந்தார்கள் சிவாஜி ரசிகர்கள். ஆவடி மாநாட்டில் 'என் ரசிகர்கள் தற்கொலைப்படையினர்' என்று சிவாஜி மிகக் கோபமாகவே பேசினார். ஆனாலும் அவரைத் தொடர்ந்து பேசிய நான் சமாதானப்படுத்திப் பேசினேன். 'அவன் ஒரு சரித்திரம்' சூட்டிங்கின் போது நடந்த சம்பவம் இது.
காமராஜரின் மறைவுக்குப் பின் நான் ஜனதா கட்சியில் சேர்ந்தேன். பிறகு சிவாஜிக்கும் எனக்கும் ஏற்பட்ட நெருக்கம் குறைந்துவிட்டது. எப்படியிருப்பினும் கடைசி வரை பெருந்தலைவரின் உண்மைத் தொண்டனாக வாழ்ந்தார் சிவாஜி. அவரது புகழ் வாழ்க.
நன்றி, வணக்கம்.
(பல. வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் அளித்த ஒரு பத்திரிக்கை பேட்டி இது)


