இந்தியத் திரையுலகில் 'நடிப்பு' என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது திறமைக்குச் சான்றாக எத்தனையோ கதைகள் உண்டு. அதில் மிக முக்கியமானது, பாலிவுட்டின் பிதாமகர் என்று போற்றப்படும் அசோக்குமார் அவர்களுக்கும் சிவாஜிக்கும் இடையே நடந்த இந்த சுவாரஸ்யமான நிகழ்வு.
காலம் 1950-களின் இறுதி. வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழில் 'உத்தமபுத்திரன்' படத்தை எடுத்து பிரம்மாண்ட வெற்றியை ஈட்டியிருந்தது. அந்த வெற்றியை இந்தித் திரையுலகிலும் நிலைநாட்ட விரும்பிய தயாரிப்பாளர்கள், நேராக மும்பைக்குப் பறந்தனர். அங்குள்ள நடிப்பு மேதை அசோக்குமாரிடம் கதையைச் சொன்னார்கள்.
"கதை என்ன?" என்று கேட்டார் அசோக்குமார்.
"தமிழில் சிவாஜி கணேசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம். நீங்கள் ஒருமுறை அந்தப் படத்தைப் பாருங்கள், உங்களுக்கே பிடிக்கும்" என்றனர் தயாரிப்பாளர்கள்.
ஆர்வத்துடன் திரையரங்கில் அமர்ந்தார் அசோக்குமார். படம் ஓடியது... திரையில் சிவாஜியின் அந்த கணீர்க்குரலும், இரட்டை வேடப் பொருத்தமும், ஆக்ரோஷமான நடிப்பும் அசோக்குமாரை ஆச்சரியத்தில் உறைய வைத்தன. படம் முடிந்து வெளியே வந்தவர், தயாரிப்பாளர்களைப் பார்த்து மலைப்புடன் கேட்டார்:
"பாப்ரே பாப்! என்ன ஒரு நடிப்பு இது! இவருக்கு இணையாக நான் நடிப்பேன் என்று நீங்கள் எப்படி நினைத்தீர்கள்?"
தொடர்ந்து அவர் சொன்ன வார்த்தைகள் தான் சிகரம். "சிவாஜி ஒரு சிறந்த நடிகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த உத்தமபுத்திரனைப் பார்த்த பிறகு, என்னால் அவரைப் போல நடிக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கே வந்துவிட்டது. ஒருவேளை நான் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருந்திருந்தால் ஒப்புக்கொண்டிருப்பேன். ஆனால், இப்போது அவர் நடிப்பைப் பார்த்த பிறகு, என்னால் இதில் நடிக்க முடியாது" என்று பணிவுடன் மறுத்துவிட்டார் அந்த மகா கலைஞர்.
ஆண்டுகள் சில உருண்டோடின. சிவாஜியின் 'ராஜாமணி பிக்சர்ஸ்' நிறுவனம் தங்களின் காவியப் படைப்பான 'பாசமலர்' படத்தை இந்தியில் எடுக்கத் திட்டமிட்டது. மீண்டும் அசோக்குமாரையே அணுகினார்கள்.
"அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. தமிழில் சிவாஜியும் சாவித்திரியும் நடித்திருக்கிறார்கள். ஒருமுறை படத்தைப் பார்த்துவிடுங்களேன்..." எனத் தயாரிப்பாளர்கள் ஆரம்பித்த போதே, அசோக்குமார் கையை உயர்த்தித் தடுத்துவிட்டார்.
அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்:
"வேண்டாம்! நான் மட்டும் மீண்டும் சிவாஜியின் நடிப்பைப் பார்த்தால், என் சொந்த நடிப்பின் மீதே எனக்கு நம்பிக்கை போய்விடும். உங்களுக்கு நான் அந்தப் பாத்திரத்தைச் சரியாகச் செய்வேன் என்று நம்பிக்கை இருந்தால் சொல்லுங்கள், நான் நடிக்கிறேன். ஆனால், மட்டும் மட்டும் ஒரு நிபந்தனை... நான் இந்தப் படத்தைப் பார்க்க மாட்டேன்!"
அப்படியே நடந்தது. சிவாஜியின் நடிப்பைப் பார்க்காமலேயே, தனது தனித்துவமான பாணியில் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தார் அசோக்குமார். இந்தியில் உருவான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ஒரு மாபெரும் கலைஞன், சக கலைஞனின் திறமையை எந்தவித ஈகோவும் இன்றி வியந்து பாராட்டுவதும், அந்தத் திறமைக்குத் தரும் மரியாதையுமே அவர்களை 'மகா கலைஞர்களாக' மாற்றுகிறது. சிவாஜி என்ற ஆளுமையின் முன்னால், பாலிவுட் ஜாம்பவானே தன் நடிப்பைச் சந்தேகிக்கிறார் என்றால், 'நடிகர் திலகம்' என்ற பெயருக்கு வேறு என்ன சான்று வேண்டும்?
Senthilvel Sivaraj


