வரலாறு என்பது வெறும் காகிதங்களில் எழுதப்படுவது மட்டுமல்ல, அது தகுந்த கலைஞர்களின் கைகளில் கலைப்படைப்பாக மாறும்போது நம் இதயங்களில் ரத்தமும் சதையுமாக உயிர் பெறுகிறது. அதற்கு ஒரு உன்னதமான சாட்சிதான் 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படம்.
சென்னை தாம்பரத்தில் அந்தத் திரையரங்கம் ஒரு மௌன சாட்சியாக நின்றது. இயக்குநர் பி.ஆர். பந்துலுவின் அழைப்பை ஏற்று, எளிமையின் உருவமான தோழர் ஜீவா தன் குடும்பத்தோடு அந்தப் படத்தைப் பார்க்கச் சென்றிருந்தார். திரை ஓடிக்கொண்டிருந்தது... வ.உ.சிதம்பரனார் செக்கிழுக்கும் காட்சிகளும், அவர் அனுபவித்த சித்திரவதைகளும் திரையில் விரிந்தபோது, அங்கே அமர்ந்திருந்த மாபெரும் மக்கள் தலைவன் ஜீவாவின் இதயம் சுக்குநூறானது.
தேசத்திற்காகத் தன்னை உருக்கிக்கொண்ட ஒரு தியாகியின் வலியைத் திரையில் கண்டபோது, தோழர் ஜீவா துக்கம் தாளாமல் தேம்பித் தேம்பி அழுதார். தன் தந்தையை எத்தகைய இக்கட்டான சூழலிலும் கலங்காமல் பார்த்த அவரது மகள் டாக்டர் உமாதேவி, "அப்பா இப்படி அழுது நான் பார்த்ததே இல்லை" என்று திகைத்துப் போனார். ஒரு புரட்சியாளனின் கண்ணீரை வரவழைத்த அந்தத் தருணம், அந்தப் படத்தின் நேர்மைக்கும் சிவாஜி கணேசனின் நடிப்புக்கும் கிடைத்த ஆகச்சிறந்த விருது.
ஜீவா அந்தத் திரையரங்கில் அழுததோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை. 1961 டிசம்பர் 'தாமரை' இதழில், இந்தப் படத்தைப் பற்றி ஒரு கனமான தலையங்கமே தீட்டினார். தமிழர்களின் வீர வரலாற்றைப் பறைசாற்றும் இந்தப் படைப்பிற்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று உரிமையோடு குரல் கொடுத்தார்.
தமிழர்களின் மனங்களில் வ.உ.சி எனும் பெயர் இன்று ஒரு அணையா விளக்காக எரிந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் மூன்று பெரும் ஆளுமைகளின் அர்ப்பணிப்பு இருக்கிறது. அந்த வரலாற்றை மீட்டெடுத்து வித்திட்டவர் மா.பொ.சி; அந்த வரலாற்றிற்குத் திரைப்படக் கலையால் தண்ணீர் பாய்ச்சியவர் பி.ஆர். பந்துலு; தன் ஒப்பற்ற நடிப்பால் வ.உ.சி-யை நம் கண்முன் ஒரு மகா விருட்சமாக மாற்றியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இமைகளையும் பேச வைத்த அந்த மாபெரும் கலைஞர்களை நாம் நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்வோம்.
செந்தில்வேல்


