தமிழ் இலக்கிய உலகின் ஈடுஇணையற்ற கவிஞராகத் திகழ்ந்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அதே சமயம், திரையுலகில் தனது நடிப்பால் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இரு துருவங்களாக விளங்கிய இவ்விரு ஆளுமைகளும் சந்தித்த அந்த வரலாற்றுத் தருணம், புகழின் எல்லையை விட எளிமையின் ஆழம் எவ்வளவு பெரியது என்பதை உலகுக்கு உணர்த்தியது. ஒரு கலைஞனின் தேடலையும், ஒரு துறவியைப் போன்ற கவிஞரின் அறியாமையையும் ஒருசேரப் பறைசாற்றும் சுவாரசியமான நிகழ்வு இது.
சின்ன அண்ணாமலை அவர்கள் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர் மற்றும் 'தமிழ்ப்பண்ணை' பதிப்பகத்தின் உரிமையாளர். ஒருமுறை நாகர்கோவிலில் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பும்போது, அருகிலேயே வாழ்ந்து வந்த கவிமணியைச் சந்தித்து ஆசி பெறலாம் என்று சிவாஜியிடம் சின்ன அண்ணாமலை கூறியுள்ளார். அப்போது சிவாஜி கணேசன் தமிழ்த் திரையுலகின் உச்சக்கட்ட நட்சத்திரமாகத் திகழ்ந்த நேரம். எங்குச் சென்றாலும் மக்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொள்ளும் காலம் அது.
சிறு குழுவினருடன் கவிமணியின் இல்லத்திற்குச் சென்றனர். அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற கவிமணி, சிவாஜியைப் பார்த்து மிக இயல்பாக, "யார் இந்தத் தம்பி? என்ன தொழில் செய்கிறார்?" என்று வினவினார்.
உலகமே வியந்து பார்க்கும் ஒரு கலைஞனைப் பார்த்து, "யார் இவர்?" என்று கவிமணி கேட்டது சின்ன அண்ணாமலைக்கும் அங்கிருந்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ஆனால், அந்த வினாவிற்குப் பின்னால் எந்தத் தற்பெருமையும் இல்லை; மாறாக, புற உலகச் செய்திகளிலிருந்து விலகித் தனது இலக்கிய உலகில் மட்டுமே வாழ்ந்த ஒரு மாமேதையின் வெள்ளந்தித் தனமே இருந்தது.
சின்ன அண்ணாமலை நிதானித்து, "பாட்டா, இவர் மிகப்பெரிய நடிகர்" என்று அறிமுகப்படுத்தினார்.
(பாட்டா-நாஞ்சில் நாட்டில் கவிமணியை அன்புடன் அழைக்கும் சொல்),
உடனே கவிமணி, "தவறாக நினைக்க வேண்டாம், நான் இதுவரை சினிமாவே பார்த்ததில்லை" என்று மிகவும் பணிவாகக் கூறினார்.
இந்தச் சொற்கள் சிவாஜி கணேசனின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. பொதுவாக ஒரு பெரும் கலைஞர் தனது புகழை உலகம் முழுதும் பரவியிருப்பதாகக் கருதுவார். ஆனால், கவிமணி போன்ற ஒரு சான்றோர் தன்னை அறியவில்லை என்பது சிவாஜிக்கு வருத்தத்தை விட ஒரு பெரிய பாடத்தைக் கற்பித்தது.
"நாம் உலகமே போற்றும் நடிகர் என்று நினைக்கிறோம், ஆனால் கவிமணி போன்ற பெரிய மனிதர்கள் விரும்பும் கதாபாத்திரத்தில் இன்னும் நாம் நடிக்கவில்லையோ?"
என்ற எண்ணம் அவரிடம் ஒரு தேடலை உருவாக்கியது. தனது கலைப்பயணத்தில் இன்னும் எட்ட வேண்டிய உயரங்கள் ஏராளம் இருப்பதாக அவர் நினைத்தார்.இது அடக்க குணம்.
கவிமணியின் அறியாமை என்பது அறியாமையல்ல, அது ஒரு முனிவரின் தெளிவு. சிவாஜியின் வருத்தம் என்பது கர்வமல்ல, அது ஒரு உண்மையான கலைஞனின் ஏக்கம். இந்தச் சந்திப்பு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், உண்மையான திறமை என்பது புகழால் மட்டும் அளவிடப்படுவதில்லை; அது சான்றோர்களின் அங்கீகாரத்தை நோக்கியே பயணிக்க வேண்டும் என்பதாகும். அதன் பிறகு சிவாஜி கணேசன் பல காவியப் படைப்புகளில் நடித்து, ஒரு சகாப்தமாக மாறியதற்கு இத்தகைய சிறிய பாடங்களே அடித்தளமாக அமைந்தன.
செந்தில்வேல் சிவராஜ்


