நடிப்பு வேதாந்தியின் ஆத்மராகம் -தெய்வமே தெய்வமே - ஒரு கலைப் பிரளயம்
சினிமா
இன்றைய காலக்கட்டத்தில், திரையில் ஓடும் கதைக்கும், காதுகளில் விழும் பாட்டுக்கும் ஏழாம் பொருத்தம். ஏதோ ஒரு தாளம், எவரோ எழுதிய வரிகள் - எதற்கும் ஆன்மா கிடையாது. இது நவீன காலத்து நாகரீகத் தலைவலி. ஆனால், பழைய பாடல்களைக் கேட்டு ரத்தமும் சதையுமாக உணர்ச்சிகளைச் சுமந்து திரியும் ரசிகர்களுக்குத் தெரியும், ஒரு பாட்டு என்பது வெறும் இசை அல்ல; அது ஒரு படத்தின் இதயத்துடிப்பு என்று!
அதற்கு ஆகச்சிறந்த சாட்சி - தெய்வமகன். கவியரசு கண்ணதாசன் பேனா முனையிலிருந்து ரத்தமும் கண்ணீருமாக வரிகள் தெறிக்க, மெல்லிசை மன்னர் இசையில் தீ மூட்ட, டி.எம்.எஸ் குரலில் கர்ஜிக்க, எல்லாவற்றிற்கும் மேலாக 'நடிகர் திலகம்' எனும் பிரம்மாண்டம் தன் ஆத்மாவையே பிழிந்து கொடுத்த பாடல் தான் "தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே".
இயக்குநர் திருலோகசந்தர் பல காட்சிகளில் சொல்ல வேண்டிய விஷயத்தை, இந்தப் பாடலின் ஐந்து நிமிடங்களில் அடக்கிவிட்டார். இது வெறும் பாடல் அல்ல; அந்த முக விகாரமான மகனின் ஆத்ம விசாரணை. அனாதை என்று நினைத்து புழுவாய் துடித்தவன், 'நீ அனாதை இல்லை' என்று தெரிந்த பின், தன் தாயைக் கண்டடைந்த அந்தப் பேரானந்தம் ஒரு பரமாத்ம தரிசனம்.
உணர்ச்சிக் குவியலில் ஒரு வேங்கை: சிவாஜியின் விஸ்வரூபம்
மேஜர் சுந்தரராஜன் குழப்பத்தோடு நிற்க, அட்டகாசமான சிரிப்போடு சிவாஜி நுழையும் போதே திரையில் மின்னல் வெட்டும்.
"தேடினேன் தேடினேன் கண்டுகொண்டேன் அன்னையை" எனப் பாடும்போது, கேமரா அவர் முகத்தை நெருங்கும். அங்கே பாருங்கள்... விழிகளில் கண்ணீர் தேங்கி நிற்கும். அதை நடிப்பு என்று சொன்னால் அது கலைக்குச் செய்யும் துரோகம்; அது ஒரு மகனின் தவிப்பு!
அந்த மாடிப்படிகளில் அவர் ஏறி இறங்கும் வேகம் இருக்கிறதே... அது ஒரு வேங்கையின் பாய்ச்சல். இசைக்கு ஏற்றபடி தன் உடலை வில்லாக வளைத்து அவர் காட்டும் வேகத்தில், நமக்கே மூச்சு வாங்கும். இதுதான் சிவாஜி - நம் உடலுக்குள் அவர் புகுந்து நம் உணர்ச்சிகளை ஆட்டிப்படைக்கும் மேஜிக்!
அழகும் அருவருப்பும் - ஒரு நடிப்புப் போர்!
"மஞ்சள் குங்குமம் பொங்கும் அழகு மகாலட்சுமி என் தாய்" என்று வர்ணிக்கும்போது அங்கே ஒரு பெருமிதம் இருக்கும். ஆனால் அடுத்த நொடியே, "அந்த அழகுத் தெய்வத்தின் மகனா இவன்... ஆ..." என்று கத்தும்போது, தன் முக விகாரத்தை நினைத்து அவர் காட்டும் அந்த அருவருப்பு... நடிப்பு பேரண்டம் என்பார்களே, அதற்கு இதுதான் இலக்கணம்! தன் முகத்தை மறைக்காமல், அந்த வேதனையை அணு அணுவாகச் சிதைத்துக் காட்டும் அந்தத் துணிச்சல் வேறு எவருக்கு வரும்?
ஆஸ்கார் நாயகர்கள் எல்லாம் இங்கே வந்து பாடம் படிக்க வேண்டும்!
அந்த நிசப்தத்தின் வலி..
"முத்துப்போல என் தம்பி" என்று ஓடி வரும்போது மூன்று ஓட்டங்கள்.மூன்றும் மூன்று
விதமான ஓட்டங்கள். "அண்ணா அண்ணா" என ஏங்கி அவர் அமரும் அந்த 'டாப் ஆங்கிள்' ஷாட்... அங்கே நிலவும் அந்த மரண அமைதி, ஒரு ஆத்மாவின் தனிமையை உரக்கச் சொல்லும். "குழந்தை என் கையை கடித்துவிட்டது" எனும்போது காட்டும் அந்த அலட்சியம், நடிப்பை லட்சியமாகக் கொண்டவனால் மட்டுமே சாத்தியம்.
அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையிலான அந்தத் தானப் போட்டியில், கர்ணன் எவ்வித யோசனையுமின்றி இரு மலைகளையும் தானமாகக் கொடுத்தது போல, சிவாஜி கணேசன் அவர்கள் இந்தப் பாடலில் நடிப்பை மலையளவு தானமாக கொடுத்திருப்பார்.
காக்க வேண்டும் தெய்வமே" என்று கைகளை உயர்த்தி நிற்கும் அந்த விநாடி... ரசிகன் தன்னை மறந்து காற்றில் மிதப்பான். இதுதான் கலை! இதுதான் பூரணத்துவம்!
கண்ணதாசன், டி.எம்.எஸ், எம்.எஸ்.வி மற்றும் திருலோகசந்தர் ஆகிய நான்கு தூண்களின் துணையோடு, நடிகர் திலகம் கட்டியெழுப்பிய இந்த 'நடிப்பு மாளிகை', எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பாடமாகத் திகழும்.
செந்தில்வேல் சிவராஜ்





















