TamilsGuide

வெறும் பத்திரத்தை மட்டும் பார்த்து காணி வாங்காதீர்கள்

புலம்பெயர் நாடுகளில் பனியில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் ரத்தம் சிந்தி உழைத்த பணத்தை, மீண்டும் ஒருமுறை நமது தாயக மண்ணில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு உறவுக்கும் இருப்பது இயல்பானது.
ஆனால், உங்கள் உழைப்பின் பலனை ஒரு சில நிமிடங்களில் ஏமாற்றிக் பறிக்க ஊரில் ஒரு கூட்டம் திட்டம் போட்டு சுற்றிக் கொண்டு திரிகின்றது.
நீங்கள் அவசரப்பட்டு காசைத் தூக்கிக் கொடுக்கும் முன், இந்த விடயங்களை ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.
"நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் , நீங்கள் காசை மட்டும் அனுப்புங்கள்" என்று சொல்லும் நண்பர்கள் அல்லது உறவினர்களை முழுமையாக நம்பி பணத்தை அனுப்பாதீர்கள்.
காணி விடயத்தில் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், நீங்களே நேரடியாக வந்து பத்திரம் மற்றும் ஆவணங்களைச் சரிபார்ப்பதுதான் புத்திசாலித்தனம்.
ஒரு சொத்தை வாங்கும் போது நீங்களே நேரடியாக வருகை தந்து ஆவணங்களைச் சரிபார்ப்பது அல்லது ஒரு சுயாதீனமான சட்டத்தரணியின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது.
தரகர்களின் (Brokers) கவர்ச்சிகரமான வார்த்தைகளைத் தாண்டி, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் (Divisional Secretariat) நிலத்தின் நிலவரத்தைக் கேட்டறிவது உங்கள் முதலீட்டிற்கு அரணாக அமையும்.
இது வரை பலர் ஏமாந்தது பேர்மிட்' (Permit) காணி எனும் பெரும் பொறியில்
குறைந்த விலையில் பெரிய காணி கிடைக்கிறது என்றவுடன் பலரும் விழுந்து அள்ளப் பார்ப்பது இந்த பேர்மிட் காணிகளைத்தான்.
இதில் வேடிக்கை என்னவெனில் பேர்மிட் காணிகளின் உண்மையான உரிமையாளர் அரசாங்கம். ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட இவற்றை சட்டப்படி விற்பனை செய்ய முடியாது.
நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும், அந்தப் பத்திரம் உங்கள் பெயருக்கு மாறாது. சட்டப்படி அது பழைய உரிமையாளருக்கே சொந்தம்.
நாளைக்கு அந்த நபர் அல்லது அவரது வாரிசுகள் வந்து உரிமை கோரினால் நீங்கள் அந்த காணியை விட்டு வெளியேற வேண்டும். அதன்பின்னர் உங்களுக்கு காணியும் கிடையாது, போட்ட காசும் கிடையாது.
தற்போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக நேர்த்தியாக Fake Documents உருவாக்குகிறார்கள்.
ஒரே காணியை நான்கு பேருக்கு விற்பனை செய்யும் வித்தை தெரிந்த சில தரகர்கள் (Brokers) உலாவிக் கொண்டுருக்கின்றனர்.
காணி வாங்கும் முன் அந்தப் பகுதியின் பிரதேச செயலகம் (DS Office) மற்றும் காணிப் பதிவு அலுவலகத்திற்கு (Land Registry) சென்று, அந்தப் பத்திரத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துங்கள்.
வெறும் பத்திரத்தை மட்டும் பார்த்து காணி வாங்காதீர்கள்.
காணியின் வரைபடம் (Plan) அங்கீகரிக்கப்பட்டதா?
அண்டை வீட்டாருடன் எல்லைத் தகராறு இருக்கிறதா?
வீதி அகலிப்புக்காக காணி சுருங்கும் அபாயம் இருக்கிறதா?என்பதை ஒரு நில அளவையாளர் (Surveyor) மூலம் உறுதிப்படுத்தவும்.
எப்போதும் 'உரித்துப் பத்திரம்' (Clear Deed / Sinnakkara Land) உள்ள காணிகளை மட்டுமே தெரிவு செய்யுங்கள்.
இதில் வில்லங்கம் (Encumbrance) இருக்கிறதா என்பதை கடந்த 30 வருட காலப்பகுதிக்குரிய 'வில்லங்கச் சான்றிதழை' எடுத்துச் சரிபார்ப்பது அவசியம்.
"நல்ல லொகேஷன், அவசரமான விக்கினம்" என்று யாராவது ஆசை காட்டினால், அங்கேதான் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே அவசரப்படாதீர்கள்!

உழைத்த காசு கானல் நீர் போல மறைந்துவிடக் கூடாது. தாயகத்தில் நீங்கள் வாங்கும் காணி உங்களுக்கு நிம்மதியைத் தர வேண்டுமே தவிர, நீதிமன்றப் படிகளை மிதிக்க வைக்கக் கூடாது.
முடிவாக, உங்கள் வியர்வைத் துளிகளால் உருவான செல்வம் மோசடி கும்பல்களின் கைக்குச் சென்றுவிடாமல் தடுக்க, விழிப்புணர்வுடன் கூடிய நிதானமான முடிவுகளே தற்போதைய தேவையாகும்.

 

Mukinthan Thurairajasingham

Leave a comment

Comment