அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழங்கு விசாரணை இன்று, கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்ததுடன் நாளைவரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் குற்றப்புலனாய்வு பிரிவு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கல்முனை வைத்தியசாலை அருகில் வைத்து இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது அவர்களின் உடமையில் இருந்து 61 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், கையடக்க தொலைபேசிகள், நிறுத்தல் தராசு ஏ.ரி.எம்.வங்கி அட்டைகள், வாகனம் ஒன்றினையும் பொலிசார் கையகப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்கள் வசிக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பகுதிக்கும் அழைத்து செல்லப்பட்டு அவர்களது வீடுகளும் சோதனையிடப்பட்டுள்ளது.


