கொக்கிளாய் பாலத்தை அமைக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி – 2027 வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதாக பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
இலங்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகியபகுதிகளை இணைக்கும் இணைப்புப்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
கொக்கிளாய் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை எதிர்வரும் மேமாதத்திற்குள் துறைசார்ந்தவர்கள் கையளித்தால் எதிர்வரும் 2027ஆம் ஆண்டிக்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பதற்கு தம்மால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தினை அமைப்பதற்கு முன்வந்தமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றேன்.
அதேபோல் கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றேன்.
ஏற்கனவே கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 ஆம் அன்று திகதி ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப்பாலத்தை அமைக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தேன்.
அதற்கமைய 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த பாலத்தை அமைப்பதற்கு சாத்திய வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே சாத்தியவள ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த பாலத்தினை அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென துறைசார்ந்த அமைச்சர் என்ற வகையில் தங்களிடம் கோரிக்கையை முன்வைக்கின்றேன். என அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் மே மாதத்திற்குள் குறித்த பாலத்தினை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை துறைசார்ந்தவர்கள் சமர்ப்பித்தால் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த பாலத்தை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்தார்.
அந்தவகையில் எதிர்வரும் மே மாதத்திற்குள் தம்மால் கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப்பாலம் அமைப்பதற்குரிய சாத்தியவள அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளால் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.























