கிழக்கு ஒன்டாரியோவில் கனடிய பிரஜை போன்று ஆளம் மாறாட்டம் செய்து பல ஆண்டுகள் வாழ்ந்த 70 வயதான அமெரிக்க பிரஜைக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு இந்த அடையாள மோசடி விசாரணையை தொடங்கியது.
குற்றச்சாட்டு நபர் போலியான அடையாளத்தை பயன்படுத்தி மீண்டும் கனடாவிற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு முதல் குற்றச்சாட்டு நபர் சட்டவிரோதமாக ஒரு கனடிய குடிமகனின் அடையாளத்தை ஏற்றிருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2008–2009 காலப்பகுதியில், நியூ ஜெர்சி மாநிலத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக தவறிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அவர், சட்டவிரோதமாக கனடாவிற்குள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்டாரியோவின் சவுத் கிளெங்காரி (South Glengarry) பகுதியில் வசித்தபோது, உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கனடிய குடிமகனின் தனிப்பட்ட தகவல்களை பெற்று, தனிப்பட்ட நலனுக்காக அவரைப் போல நடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட அந்த அடையாளத்தை பயன்படுத்தி, பின்னர் மேலும் ஒரு போலியான அடையாளத்தையும் உருவாக்கி, மோசடியாக கனடிய குடியுரிமைச் சான்றிதழ், கடவுச்சீட்டு (passport), ஓட்டுநர் உரிமம் மற்றும் சுகாதார அட்டை ஆகியவற்றையும் பெற்றிருந்தார்.
போலியான அடையாளத்துடன் கனடாவிற்குள் மீண்டும் நுழைய முயன்றபோது, கனடா எல்லை சேவைகள் முகவர் நிறுவன (CBSA) அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது மோசடியாக பெறப்பட்ட அனைத்து அடையாள ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
குடியுரிமை மோசடி, அடையாள மோசடி, போலி கடவுச்சீட்டை தயாரித்தல் அல்லது பயன்படுத்தல், அரச ஆவணத்தை சட்டவிரோதமாக வைத்திருத்தல் மற்றும் பொய்யான அறிக்கை அளித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒரு ஆண்டு சிறைத் தண்டனையுடன், அடுத்த மூன்று ஆண்டுகள் கனடாவிற்குள் நுழையத் தடை விதிக்கும் பரோல் (probation) உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.


