'கை சிவக்க அள்ளி கொடுப்பதில் அந்த கர்ணனையும் மிஞ்சியவர்' என்ற வசனம் "அன்பேவா" வில் வரும். இதிகாச கர்ணன் அள்ளிக் கொடுத்ததாக நாம் பாரதத்தில் படித்திருந்தாலும் அதை கண்டவர் விண்டிலர். ஆனால் நாம் கண்கூடாக பார்த்த நம் தலைவர் அள்ளிக் கொடுத்ததை நாம் மட்டுமல்ல இந்த நாடே கண்குளிர பார்த்தது. அள்ளிக் கொடுப்பது மட்டுமல்ல வயிறு முட்ட அனைவருக்கும் அன்னதானம் செய்தவர். அவருக்குப்பின் இன்று திரையுலகம் தத்தளிக்க காரணம் அடுத்து ஒரு வள்ளல் இல்லாததால்.
தன்னை நம்பி வந்தவர்களை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை. வறுமை நிலையிலும் கடன் வாங்கி கூட தான தர்மங்கள் செய்தவர்.
"கர்ணன்" ஏன் வெற்றி பெறவில்லை என்பதை பார்க்கலாம். "கர்ணன்" பாத்திரம் ஒரு சிலருக்கு மிகவும் பிடிக்க காரணம் அவனுடைய கொடைத்தன்மையே. ஆனால் கர்ணன் தனது சொந்த செல்வத்தையோ தனது பூர்வாங்க செல்வத்தையோ கொடையாக கொடுக்கவில்லை. துரியோதனன் தன் கட்டுப்பாட்டில் உள்ள அங்க தேசத்தை கர்ணனுக்கு கொடுத்து அரசனாக்கினான். ஆனால் புரட்சி தலைவரோ அரசியல் களத்தில் மூன்று முறை தன் எதிரிகளை ஓட ஓட தமிழகத்தின் எல்லையை விட்டே விரட்டி வங்க கடலோரத்தில் அமைந்த தங்க தமிழகத்தின் மன்னனாக முடிசூடிக் கொண்டார். திரையுலகிலும் நடிப்பு என்ற பெயரில் வித்தை காட்டியவர்களை விரட்டி விட்டு முடிசூடா மன்னனாக வீற்றிருந்தார்.
அதுவும் தர்ம நீதியை கடந்து துரியோதனன் அடைந்த செல்வத்தின் ஒரு பகுதியையே யாசகம் பெற்று கொடையாக கொடுத்தான்.
மனுதர்மத்தை கடைபிடித்தவன் அல்ல கர்ணன். சுதர்மத்தை கடைப்பிடித்து தர்மத்துக்கு எதிராக அநீதிக்கு ஆதரவாக நடந்தவன். அரசவையில் ஒரு பெண்ணுக்கு(பாஞ்சாலி) எதிராக அநீதி நடக்க துணை போனவன். அவன் பரசுராமரிடம் கற்ற வித்தையும் தான் ஒரு அந்தணன் என்று பொய்யரைத்ததால், அதுவும் இக்கட்டான சமயத்தில் பலனற்று போயிற்று.
அந்தணனின் மகனை தேரேற்றி கொன்று அவர் சாபத்தை பெற்று தேர்க்கால் போர்க்களத்தில் பதிந்து கையறு நிலைக்கு தள்ளப்பட்டான். செஞ்சோற்று கடன் தீர்க்க அநீதியின் பக்கம் சாய்ந்தான். ஏன் கர்ணன் சோறு கிடைக்காமல் கஷ்டப்பட்டானா? அரசவையில் தேரோட்டி மகன் என்று தன்னை இழிவு படுத்தியதால் வந்த ஆத்திரத்தில் அநீதியின் பக்கம் சாய்ந்தவன். தான் எங்கு உருவானோமோ அதை கேவலமாக கருதும் எண்ணம் எப்படி சிறந்ததாகும்?.
எதுவுமே கர்ணன் நியாயமாக பெறவில்லை என்பதால் அவன் மீது எப்படி அனுதாபம் ஏற்படும். அதனால் கர்ணன் பாத்திரம் மக்களிடம் அவ்வளவாக எடுபடவில்லை என்பதே உண்மை. இவ்வளவுக்கும் கண்ணன் மூலமாக உண்மை தன் தாயின் வாயிலாக அறிந்தும் அநீதிக்குத்தான் என் ஆதரவு என்று முழங்கிய கர்ணன் எப்படி நல்லவன் ஆவான். இத்தகைய உண்மையை மக்கள் அறிந்ததால்தான் "கர்ணன்" பாத்திரம் மக்களை வெகுவாக ஈர்க்கவில்லை. ஏற்கனவே கர்ணனின் இந்த குணாதிசயத்தை மேலும் மிகைப்படுத்தி மிகை நடிகர் கர்ணன் பாத்திரத்தை சிதைத்து வதைத்ததால் படம் நொந்து போனது.
வீரத்திலும், அர்ஜீனனுக்கு நிகர் கர்ணன் இல்லை என்பது பாஞ்சால தேசத்தை போரில் வெல்ல முடியாமல் தோற்று திரும்பியபோது தெரிந்தது. ஆனால் மாறு வேடத்தில் இருந்த அர்ஜீனன் கர்ணன் சேனையை சிதறடித்து விரட்டியதில் அவனுடைய வீரம் நிகரற்றது என்பதை உணர்த்தினான். மேலும் பாஞ்சாலி சுயம்வரத்தில் தோற்று பாஞ்சாலியின் சிரிப்பால் அவமானம் அடைந்தவன். அர்ஜீனனின் வீரம் உலகம் ஏற்றுக் கொண்டது. நாகாஸ்திரம் உதவியுடன்தான் கர்ணன் தன் வீரத்தை காட்டினான்.
பசிப்பிணியை தீர்ப்பதுதான் உலகின் தலையாய தர்மம் என்பதை உணராத கர்ணன் பொருளை கொடுத்து அருளை வேண்டினான். அந்த தர்மம் தலைசிறந்ததல்ல என்பதால் சொர்க்கம் மறுக்கப்பட்டான். மீண்டும் அதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு சொர்க்கம் சேர்ந்தான் என்று பாரதம் கூறுவதை பார்த்தால் உணவு தர்மம் தான் தானங்களில் சிறந்தது என்பது தெரிகிறது. அந்த உணர்வை இயற்கையாகவே பெற்ற மக்கள் திலகம் நிச்சயம் ஒரு யுக புருஷனாகத்தான் இருக்க வேண்டும். நடிப்பு தொழிலை தங்கள் சுயலாபத்திற்காக வித்தைகள் செய்து பயனடைந்த சினிமா உலகில், அவர் தான் ஏற்றுக் கொண்ட நடிப்பு தொழிலை பெருமைப் படுத்தினார். அதனால்தான் திரையில் தோன்றிய இதிகாச "கர்ணனை" வேட்டையாடி வெற்றி கொள்ள முடிந்தது.
அவர் இல்லத்துக்கு சென்று பசியுடன் வந்தவர் இல்லை. அது மட்டுமின்றி சத்துணவு மூலம் நாட்டின் வித்துக்களை பசிப்பிணியின்றி காத்த மக்கள் திலகத்தை கலியுக கர்ணன் என்பது சரியல்ல. அந்த கர்ணன் பொருளை மட்டும்தான் கொடுத்தான். ஆனால் மக்கள் திலகமோ மக்களின் பசிப்பிணியை போக்கியதோடு பொன்னையும் பொருளையும் கொடுத்து வாழ்வில் சுபிட்ச நிலைக்கு கொண்டு சேர்த்தார் என்பதால் அவரை கடையேழு வள்ளலுக்கு அடுத்த எட்டாவது வள்ளல் என்றே குறிப்பிடலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மை
வாழ்க! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.


