TamilsGuide

கண்ணதாசன் பற்றி வாணிஜெயராம் சொல்கிறார்.....

மிகப்பிரபலமான வாரப் பத்திரிகை ஒன்றில் கண்ணதாசன் எழுதிய "இந்த வாரம் சந்தித்தேன் " என்ற தொடர் வெளியானது.
காலை 6:30 மணிக்கு கவிஞரிடமிருந்து எனக்கு போன்.
வாணியம்மா ...உங்களப் பத்தி இந்த வாரம் எழுதியிருக்கேன் படிச்சுப் பாத்துட்டுச் சொல்லுங்க என்றார்.
சிலரைப் பார்க்கும் போது நம்மை அறியாமலேயே ஒரு பாசம் ஏற்படும் .அதிகம் பழகியோ இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசியோ இருக்கமாட்டோம்.ஆனால் அவர்கள் நல்லவர்கள் உயர்ந்தவர்கள் என்ற அபிப்ராயம் திடுதிப்பென்று வந்துவிடுகிறது.சொல்லப்போனால் அந்த அபிப்ராயம் சரியாகவும் இருக்கிறது.
சிலர் திரும்பத் திரும்ப பழகினாலும் அவர்களைப் பற்றிய எவ்வித உணர்ச்சியும் நம் மனதில் எழுவதில்லை.நான் அபூர்வமாகச் சந்திப்பவர்களில் ஒருவர் வாணிஜெயராம்.
ரெக்கார்டிங் போனால்தான் அவரைச் சந்திப்பேன்.ஆனால் பெரும்பாலும் பாடல் ஒலிப்பதிவுக்கு நான் போவதேயில்லை.
அன்று அபூர்வமாக ஒரு ஸ்டூடியோவில் வாணிஜெயராமைப் பார்த்தேன்.இந்தியாவின் எல்லா மொழிகளிலும் பாடியவர் என்ற சிறப்பைப் பெற்ற வாணிஜெயராம் மிகவும் அடக்கமானவர்.
யார் அவரைப் பார்த்தாலும் தங்கள் குடும்பத்தில் அப்படி ஒருவர் இருக்கவேண்டும் என்று நினைக்கத் தோன்றும்.
எனக்கு ஏதோ ஒரு நெருங்கிய உறவுக்காரப் பெண் நினைவே வாணிஜெயராமைப் பார்க்கும் போதெல்லாம் வரும்.
10 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் சந்தித்தபோதே பளிச்சென்று அந்த எண்ணம் உண்டாயிற்று.
வாணியின் தோற்றத்தைப் பார்ப்பவர்கள் அவர் கலையுலகத்தில் இருப்பவராக நம்பமாட்டார்கள்.அவர் அழகானவர் .திருத்தமானவர்.குடும்பப் பாங்கானவர்.
தோற்றத்தில் பாண்டிய நாட்டுப் பெண்கள் மாதிரி ஒரு கம்பீரம் இருக்கும்.
அதுபோல அடக்கமும் அமைதியும் இருக்கும்.
இப்படி எழுதியிருந்தார் கண்ணதாசன்.
🙏 தினமலர் வாரமலர் 🙏
 

Leave a comment

Comment