1944 ஆண்டு ஜீ.ஜீ.பொன்னம்பலம் தொடங்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அவ்வேளை பேசுபொருளாக இருந்த இலவசக் கல்வித்திட்ட மசோதாவை எதிர்த்தது. அரசாங்க சபையில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மகாதேவா, சிறிபத்மநாதன் என்கின்ற தமிழ் பெரும் தலைவர்கள் ஒற்றுமையாக நின்று இவ்வெதிர்ப்பை தெரிவித்தனர். யாழ்-மத்தியதர வர்க்கத்தைத் தவிர ஏனையோரும் கிழக்கிலங்கை,தென்னிலங்கை வாழ் ஏழை எளிய மக்களும் கல்வியறிவு பெறக்கூடாது என்பதில் இந்த யாழ்ப்பாணத் தலைமைகள் மிகக் கவனமாக செயற்பட்டனர். காரணம் இந்த இலவசக் கல்வித்திட்டம் கொண்டிருந்த நோக்கங்கள் இவர்களுக்கு உவப்பானதாய் இருக்கவில்லை. பணவசதி கொண்டவர்களுக்கு மட்டுமே கல்வியறிவைப் பெறும் வாய்ப்புகள் தொடரவேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருந்தனர். உண்மையில் பணக்காரவர்க்கத்தின் வசம் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த கல்வியானது பாமர மக்களுக்கும் சென்றடைவதனை மக்கள் நலனில் அக்கறைகொண்டிருக்கும் எந்த அரசியல் கட்சியும் வரவேற்காமல் இருக்கமுடியாது. ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் விடுதலை விரும்பிகளாக தம்மைக் காட்டிய தமிழ் காங்கிரசின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அதற்கு எதிரான செயற்பாடுகளையே மேற்கொண்டனர். பாமர மக்களுக்
கு அறிவுப் பொக்கிசத்தைத் திறந்துவிட முனைந்த சிங்கள அரசியல்வாதியான டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா போன்றவர்களுடன் ஒப்பிடுகையில் நமது தலைமைகளே துரோகங்களின் பிறப்பிடமாய் இருந்திருக்கிறார்கள்.
அதேபோன்று யு.என்.பி அரசு பிரசா உரிமைகளை ரத்துச் செய்து நாடற்றவர்கள் எனும் நிலைக்கு மலையக சமூகத்தை கொண்டுவந்து அவர்களின் வாக்குரிமைகளைப் பறிக்கும் கொடூரமான திட்டத்தை தீட்டியது. இதன்படி 15-நவம்பர்-1948 அன்று பாராளுமன்றத்தில் யு.என்.பி. அரசு கொண்டுவந்த பிரஜாவுரிமைச் சட்த்தின்மீது தமிழ்காங்கிரஸின் பொன்னம்பலம் தலைமை ஆதரவைத் தெரிவித்தது. இதன்மூலம் 10 இலட்சம் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையை ஒரேநாளில் பறித்த யு.என்.பி முதலாளித்துவ அரசினது அநாகரிக செயலுக்கு பொன்னம்பலம் உடந்தையாயிருந்தார்.
M R Stalin Gnanam


