இது உன் அண்ணன் வாடகை தர்ற வீடு...உனக்கு பெரியவனே சும்மா கிடக்கான். நீ என்னமோ எகிருறியே.... இஷ்டமிருந்தா இரு, இல்லேன்னா வெளியே போ...” தாயின் வார்த்தைகள் சுடுநீரை நெஞ்சில் கொட்டியதுபோல் திரும்பத் திரும்ப வலியைக் கொடுக்க, தற்கொலை செய்யும் எண்ணத்துடன் விறுவிறுவென கடலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கால்கள் கடற்கரையை நோக்கி நடந்தன...“அம்மா ஏன் அப்படி பேசினார்? கோபத்தில் அம்மாவை மற்றவர்கள் முன் அவமதித்து விட்டோமோ?”, மது விஷயத்தை பெண்களிடம் கேட்பது எத்தனை அறியாமை? ஏன் இப்படி நடந்து கொண்டோம்...? அண்ணனிடமும் ஒருவார்த்தை கேட்டிருக்கலாமோ." ராம்சந்தர் மனதில் இப்படி பல கேள்விகள்.
சிந்தனையின் முடிவில் கடற்கரையை நெருங்கியிருந்தார். “இனி இந்த முகத்துடன் வீட்டிற்குச் செல்வதா... தற்கொலை செய்வதுதான் ஒரே வழி”...தீர்க்கமுடன் கடலில் இறங்கினார் ராம்சந்தர். அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது...டேய்.. ராமச்சந்திரா...நில்லுடா.. நில்லு....அண்ணன் சக்கரபாணிதான் அது. கடலில் இறங்கியவரை தடுத்து நிறுத்திய சக்கரபாணி, “அம்மா எல்லாத்தையும் சொன்னாங்க...இந்த வயதில் இத்தனை கோபம் தேவையா உனக்கு... இவ்வளவு கோபப்பட்ட உனக்கு என்னிடம் ஒருவார்த்தை கேட்கத் தோணலையா...பிரசவத்திற்குப் பிறகு அண்ணியின் உடல் தேறுவதற்காக சிறிதளவு பிராந்தி சாப்பிடுவது நல்லது என மருத்துவர் சொன்னார். அதற்காக அம்மாவிடம் சொல்லி நான்தான் வாங்கி வரச்சொன்னேன். அவர் வேலு நாயரிடம் சொல்லியிருந்தார். வாங்கி வரும்போது கொஞ்சம்தானே தேவை என்று கருதி முக்கால் பங்கை அவர் குடித்து விட்டு மீதத்தை அம்மாவிடம் கொடுத்தார். உனக்குத் தெரிந்தால் தேவையற்ற பிரச்னை என்று நினைத்து அம்மா அதை பீரோவில் மறைத்து வைத்தார்.
இதெல்லாம் தெரியாமல் பல பேர் முன்னிலையில் அம்மாவை, கண்டபடி பேசி விட்டாய். அதுதான் அவமானம் பொறுக்காமல் உன்னை கோபப்படுத்துவதற்காக அண்ணன் வீடேன்றெல்லாம் சொல்லி திட்டி விட்டார். அதற்குப் போய் தற்கொலை செய்யும் முடிவை எடுப்பாயா...வா வீட்டிற்கு” தம்பி தோள் மீது கைவைத்தபடி, அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். மதுவின் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த வெறுப்பின் சாட்சியமாக இந்த சம்பவத்தைச் சொல்லலாம். தன் இளம் வயதில் மதுவின் மீது அவருக்கு இருந்த வெறுப்பு, இறுதிக்காலம்வரை இருந்தது. மதுவாடை உள்ளவர்களை அறவே வெறுத்தார் அவர். தன்னுடன் நடித்தவர்கள் பலர், மது குடிப்பவர்களாக இருந்தபோதும் பலமுறை அறிவுரை சொல்லியும், தங்களை திருத்திக்கொள்ளாத அவர்களில் பலரை தன் அடுத்த படங்களில் இடம்பெற அவர் அனுமதிக்கவில்லை.
தி.மு.க-விலிருந்து பிரிந்து 1972-ம் ஆண்டு அ.தி.மு.க-வைத் தொடங்கிய எம்.ஜி.ஆர், கட்சி உறுப்பினர்களுக்கான தகுதிகளாக சிலவற்றை பட்டியலிட்டு அவரது கையெழுத்துடன் உறுப்பினர் படிவம் பெறும்போது, அந்தப் பட்டியலும் கொடுக்கப்பட்டது. அதில் முதல் தகுதியே, 'மதுவைத் தொடாதே' என்பதுதான். மதுவின் கோர முகம் அத்தனை பயங்கரமானது என்பதை தன் ஆரம்ப நாட்களிலேயே கண்டு கொண்டவர்.
எம்.ஜி.ஆருக்கு திரைப்பயணத்தின் ஆரம்ப நாட்களில் புகழ்தந்த படம் 'தட்சயக்ஞம்'. அந்தப் படத்தில் முதலில் அவருடைய வேடத்திற்கு, இன்னொரு நாடக நடிகர் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் புகழ் அடைந்தார். அதற்குக் காரணம், அந்த நடிகரின் எதிர்பாராத மரணம். ஆம், ராஜபார்ட் நடிகராக இருந்து நாடக மேடையில் அபரிமிதமான புகழ்பெற்றிருந்த அந்த நடிகர் பெரும் குடிகாரராக இருந்தார். புராண வேடங்களில் அவர் எந்த பாத்திரத்தில் நடித்தாலும் கூட்டம் மெய் மறந்து ரசிக்கும். அத்தனை அழகும், திறமையும் ஒருங்கே கொண்டவர் அவர். நாடக மேடையில் இருந்து திரைப்படத்தில் கால் வைத்த அந்த நடிகர், தன் குடிப்பழக்கத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. ஓயாத குடிப்பழக்கம் அவரையே குடித்து விட்டது. திரைத்துறையில் நல்ல வாய்ப்பு கிடைத்து, எதிர்காலத்தில் பிரகாசிக்க வேண்டிய அவர் தீராத குடியினால் ஒருநாள் மரணமடைந்தார். 'தட்சயக்ஞம்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த தருணத்தில் அவரது மரணம் நிகழ்ந்தது. அதே படத்தில் சிறுவேடத்தில் நடிக்கவிருந்த ராம்சந்தருக்கு கிடைத்தது அந்த வேடம்.
நல்ல அழகும், திறமையும் கொட்டிக் கிடந்தபோதும் வாய்ப்பு வந்தபோது, அதை பயன்படுத்திக் கொள்ள தன் உடலை கட்டிக்காக்கத் தவறிய அந்த நடிகரின் மரணம், எம்.ஜி.ஆரை பலத்த சிந்தனைக்கு உள்ளாக்கியது. வாய்ப்புகள் வரும், போகும்... இப்போது வரலாம் அல்லது எப்போதும் வரலாம்... ஆனால் அது வரும்போது நமது திறமையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோமா என்பதில்தான் நமது எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்கிற பேருண்மையை அந்த நடிகர் தன் மரணத்தின் மூலம் எம்.ஜி.ஆருக்கு உணர்த்திச் சென்றார். 1960-களின் மத்தியில் பொறுப்பாசிரியராக இருந்து, தான் நடத்திய 'சம நீதி' என்ற இதழில் எம்.ஜி.ஆரே தனது வாழ்க்கை வரலாற்றுப் பதிவில் எழுதியுள்ளார். 'மரணம் தந்த வாழ்வு' என்ற தலைப்பில் இந்த சம்பவத்தைப் பதிவு செய்திருந்தார் எம்.ஜி.ஆர். - Vikatan EMagazine


