TamilsGuide

கடவுளே மக்கள் முன் தோன்றினால்....

இப்படி ஒரு வரவேற்பு இருக்காது!

கடவுளுக்கே கிடைக்காத வரவேற்பை பெற்றவர் உலகில் நமது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான்!

அன்று நடந்த சம்பவத்தை ஒரு நிருபர் கூறியதை படியுங்கள்

1984-ம் வருடம்... எம்.ஜி.ஆர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு மாதங்களாயிற்று; இங்கிருந்து அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டே மூன்று மாதங்களாயிற்று. அதே உடல்நலத்துடன் திரும்பி வருவாரா? அதே உற்சாகம் அப்படியே இருக்குமா? கட்சியிலேயே பாதிபேருக்கு இதில் நம்பிக்கை இல்லை; இத்தனைக்கும், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அம்மையார் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோது
அவர்குறித்த தகவல்கள் ரகசியம் காக்கப்பட்டதுபோல அன்றைக்குப் பெரிதாக ரகசியமெல்லாம் எதுவும் இல்லை. அவ்வப்போது எம்.ஜி.ஆரின் உடல்நலம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. இருந்தும் எம்.ஜி.ஆர் மீண்டும் இங்கு திரும்பிவரும் வரையிலும் பதற்றம் தணியாது காத்திருந்தனர் அன்றைய அ.தி.மு.க.வின் ரத்தத்தின் ரத்தங்கள். இறுதியாக 1985-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி அவர் சென்னை வருவதாகத் தகவல் வெளியானது. பரங்கிமலையில் ஒரு திடலில் மக்கள் முன்பு தோன்றுவதாக முடிவானது. இத்தனை மாதங்கள் கழித்து, தங்கள் தலைவரைக் காணப்போகிறார்கள்; தொண்டர்களின் ஏக்கத்தையும் ஆர்வத்தையும் சொல்லவா வேணும்? வீதி நெடுக மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.
கூட்டத்தில் வி.ஐ.பிகளுக்கே ஏகப்பட்ட கெடுபிடிகள்; இந்நிலையில் பத்திரிகையாளர்களின் கதி? கொஞ்சம் கடினம்தான். அத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்தக் கூட்டத்தின் உணர்ச்சிகளை களத்திலிருந்து பதிவுசெய்திருக்கிறார் அன்றைய விகடனின் நிருபர் காலை நடக்கவிருந்த கூட்டத்திற்கு முதல் நாள் இரவே சாதம் கட்டிக்கொண்டு கிளம்பி வந்திருந்த மக்கள் முதல் கீழே விழுந்தாலும் எம்.ஜி.ஆர் மீதிருந்து இமை விலகாது பார்த்துக்கொண்டிருந்த `பக்தர்கள்' வரை... அந்த ஒரு இரவில், அத்தனை உணர்ச்சிகள்... அந்தப் பதிவு அப்படியே அனைவருடைய பார்வைக்கு...
பிப்ரவரி மூன்றாம் நாள். ஞாயிறு மாலை ஆறு மணியிலிருந்தே சென்னை நகரம் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது. வழக்கத்திற்கு அதிகமான கார்கள், லாரிகள்... எக்கச்சக்கப் புதுமுகங்கள்...
சென்னைவாசிகள் கூட மாலை ஏழு மணிக்கே ஒரு போர்வை, கட்டுச்சாதம் சகிதம் புறப்பட்டனர்.
எல்லோர் பயணமும் சென்னை பரங்கிமலையிலுள்ள மொகைத் திடலை நோக்கிதான். எல்லோர் ஆவலும் `தமிழக முதல்வரை தரிசிக்கவேண்டும்' என்பதுதான்!
நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? எட்டு மணிக்கெல்லாம் கிண்டி போய் விட்டோம். விழா நடக்கும் திடல் இங்கிருந்து 2 பர்லாங் தொலைவிலிருந்தது. ஆனாலும் இங்கேயே நல்ல கூட்டம்.
``எம்.ஜி.ஆரு...எம்.ஜி.ஆர்...
எமனைக் கொன்ன எம்.ஜி.ஆர்."
``ஏழைகளின் தெய்வமாம்,
எம்.ஜி.ஆர். நம்ப ஆண்டவர்!"
என்று கோஷமிட்டபடி ஒரு கோஷ்டி ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி திடலுக்குச் சென்றார்கள்.
``ஜெய்..ஜெய்.. எம்.ஜி.ஆர்.

ஜெயிச்சிட்டாரு எம்.ஜி.ஆர்."
என்று பாடியபடி ஒரு கோஷ்டி, அக்கோஷ்டியின் முன்னணியில் ஓர் இளைஞர் உடம்பெல்லாம் விபூதி பூசியபடி, முகத்தில் ரோஸ் பவுடரை அடித்துக் கையில் அ.தி.மு.க கொடி ஒன்றைப் பிடித்துக்கொண்டு போக, கூட்டம் பின்தொடர்ந்து சென்றது. கூட்டத்தின் கடைசியில் இரண்டுபேர் ஆளுக்கொரு பெரிய சைஸ் செம்பைக் குலுக்கியபடி வசூல் செய்தபடி சென்றனர். காணிக்கையாம்! யாருக்கு, எதற்கு என்ற விவரத்தை யாரும் கேட்காமல் வாரி வாரி வழங்கினர். ஒரு ஆசாமி நூறு ரூபாய் நோட்டொன்றைப் போட்டார்!
நெல்லிக்காய் வியாபாரி ஒருவர் ``எம்.ஜி.ஆரின் இதயக்கனி..." என்று கூவி விற்றுக்கொண்டிருந்தார்!
மைதானத்தில் கூட்டம் ஆங்காங்கே இருந்தது. பெண்கள், ஆண்கள் எனப் பகுதி பிரிக்கப்பட்டிருந்தாலும் ஆண்களும் பெண்களும் பல இடங்களில் ஒன்றாகவே இருந்தார்கள்!
வி.ஐ.பி பகுதியருகே சென்றோம். வி.ஐ.பி-க்கள் யாரும் அந்நேரத்தில் வந்திருக்கவில்லை; நம்மைத்தவிர!
மெல்ல மேடையருகே சென்றோம். சில போலீசார் ஓடிவந்து அடிக்காத குறையாகத் துரத்தினார்கள்.
அறிமுகமான போலீஸ் அதிகாரி ஒருவர் கண்ணில் பட்டார். `விஷ்' பண்ணினோம்... வாங்கிக்கொண்டு அவர்பாட்டுக்கு மேடைக்குப் போய்விட்டார். ஆனாலும் `அவர் கூப்பிட்டார்' என்று சொல்லி மேடையில் ஏறிவிட்டோம்!
ஜேப்பியார் மேடை செட்டப்பைக் கண்காணித்துக் கொண்டிருந்தார், ஏம்ப்பா.. இத பாரு... கம்பளம் இந்த எடத்துல கொஞ்சம் தூக்கியிருக்கு... யாராவது தடுக்கி விழணுமாம்... அடுத்த நிமிஷமே நீங்கள்லாம் காலி, ஆமா..." என்றார்!
திடீரென்று ஒரு போலீஸ் அதிகாரி நம்மை மடக்கி ``பாஸ் வைத்திருக்கிறீர்களா?? என்று கேட்க, ``இல்லை" என்றோம். உடனே, ``அப்படின்னா நீங்க கூட்டக் கடைசியிலேதான் நிக்கணும்... கொஞ்ச நேரத்திலே ஸ்ட்ரிக்டா இருக்க ஆரம்பிச்சுடுவோம். பாஸ் இல்லாம யார் வந்தாலும் நோ என்ட்ரி..." என்றார்.
அப்போது ஜேப்பியார் யாரிடமோ, ``டேய்..முதல்லயே வந்திருக்கக் கூடாதா! எங்ககிட்ட இருந்த பாஸ் எல்லாத்தையும் இஷ்யூ பண்ணிட்டேன்... சரி... மினிஸ்டர்ஸ் யார் வீட்டுக்காவது பாஸ் வாங்கிட்டு வா... உடனே போயிட்டு வா..." என்றார்
உடனே நாமும் யாராவது மந்திரியைப் பார்த்து பாஸ் வாங்கி வரலாமென்று கிரீன்வேஸ் ரோடு வந்தோம். சில அமைச்சர்கள் வீடுகளுக்குச் சென்று பாஸ் கிடைக்குமா என்று ட்ரை பண்ணினோம். தோல்விதான் கிடைத்தது!
`எப்படியாவது நுழைந்துவிடலாம்' என்ற நம்பிக்கையுடன் திடலுக்கு வந்து சேர்ந்தோம். மணி நாலேகால் ஆகிவிட்டிருந்தது. வி.ஐ.பி-களுக்கென ஏற்படுத்தப்பட்டிருந்த வாயிலருகே ஒரு போலீஸ், ``சார்... பாஸ் இல்லாம விட்டுட்டா என்னை என்கொயரி பண்ணுவாங்க, சார்... ப்ளீஸ் யாரையாவது அட்ஜஸ்ட் பண்ணி அந்தப்பக்கமா மினிஸ்டர்ஸ் போற வழிலே போயிடுங்க.." என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
யாரிடம் தெரியுமா? எஸ்.எஸ்.ஆரிடம்தான்! எஸ்.எஸ்.ஆர் ஒன்றும் பதில் பேசத் தோன்றாமல் மந்திரிகள் செல்லும் பாதைக்குச் சென்றார். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஒரு சல்யூட் அடித்து உள்ளே விட்டுவிட்டார். நாமும் நைஸாகப் பின்தொடர்ந்தோம்... அந்தோ! நம் சட்டை காலரைப் பிடித்திழுத்து வெளியே அனுப்பிவிட்டார்கள்.
நாம் வெறுத்துப் போய் பொதுமக்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தோம். நிறையபேர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் சரியாகவே தெரியாத சினிமாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் வயதான தம்பதி... அவர்களிடம் ``இந்தப் பனியில எம்.ஜி.ஆரைப் பார்க்க கஷ்டப்பட்டு இருக்கணுமா?" என்று கேட்டோம்.
அந்தப் பெரியவர் நம்மை ஒரு அலட்சியப் பார்வை பார்த்தபடி, `அந்தத் தெய்வத்தையே பனியில கூட்டிட்டு வந்து உட்காரச் சொல்லப் போறாங்க... நாங்க படற கஷ்டமா பெரிசு?" என்று கேட்டார்.
ஒருவழியாக இரவு கழிந்தது.
காலை மணி ஆறு ஆயிற்று.
தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்தமர்ந்தபடி `எம்.ஜி.ஆர்.' என்ற மந்திரத்தை முணுமுணுக்க ஆரம்பித்தனர்.
ஆங்காங்கே `புரட்சித் தலைவர்' என்ற குரலும், அதைத்தொடர்ந்து `வாழ்க' என்ற கோரஸும் பலரின் உடம்பிற்குச் சற்று வெப்பத்தைத் தந்தது!
சற்றுநேரத்தில் புரட்சித் தலைவர் மேடையில் தோன்றினார். கூடியிருந்த மக்களின் உணர்ச்சிக்குரல் அந்தத் தொண்டர்களின் தானைத் தலைவனையே கண்கலங்கச் செய்துவிட்டது.
அந்த வயதான தம்பதி எம்.ஜி.ஆரைக் கண்டு `பட் பட்'டென கன்னத்தில் போட்டுக்கொண்டனர். அப்போது பின்னாலிருந்த கூட்டம், அந்தத் தம்பதியை நெருக்கித் தள்ள, கீழே விழப்போனார்கள். ஆனால், அப்போதும் அவர்கள் கலங்கிய கண்கள் எம்.ஜி.ஆரின் முகத்தில்தான் பதிந்திருந்தன.
- ஜுனியர் விகடன்.
பத்திரிகையாளர் மதுரை ராமகிருஷ்ணன் தந்த தகவல்.....
வாழ்க்கையில் மறக்கமுடியாத , ஒரு நாள்....1985. பிப்.4. அன்று ..,மக்கள் திலகம், பொன்மன செம்மல், புரட்சித்தலைவர் தமிழக முதல்வர், எம்.ஜி.ஆர். அவர்கள், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, , மறு பிறவி எடுத்து, , சென்னை திரும்பிய நாள்...அன்றைய தினம், அதிகாலையிலேயே,, நான்
( ராமகிருஷ்ணன்) உட்பட, அனைத்து பத்திரிகையாளர்கள், பரங்கிமலை மைதானத்தில் , காத்திருந்தோம்.. பாதுகாப்பு அதிகாரிகள், எங்களிடம் பாஸ் இருந்தும், பத்திரிகையாளர்களை ,
100 அடி தூரம் தள்ளி நிறுத்திவிட்டனர்...
சூரியன் உதயமாகும் நேரம், , எம்.ஜி.ஆர். அவர்கள் வந்த 4777 எண்ணுள்ள கார், ,படியில்லாமல், அமைத்திருந்த, சறுக்கு பாலம் வழியாக ,மேடைக்கு வந்ததும், ,தமிழகம் முழுவதிலுமிருந்து, வந்திருந்த லட்சக்கணக்கான மக்கள், ஒரே நேரத்தில் ," புரட்சி தலைவர் வாழ்க," என்று போட்ட கோஷம், வானமே அதிர்ந்தது...
மேடைக்கு காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். வழக்கம்போல் கை அசைத்து , சிரித்துக்கொண்டே, தள்ளி நிறுத்தி வைக்கப்பட்ட எங்களை (நிருபர்களை) பார்த்து சைகையில், ஏன் அங்கே, இருக்கிறீர்கள், வாருங்கள் முன்னே,..என்று கை அசைத்தவுடன், எங்களுக்குள் கேமராவுடன், முட்டி மோதிக்கொண்டு , மேடை அருகே சென்றுவிட்டோம்..
நூற்றுக்கணக்கான புகைப்பட நிருபர்களோடு, போட்டி ,போட்டுக்
கொண்டு நான் (ராமகிருஷ்ணன்)
தினமலருக்காக, எடுத்த பிலிம் ரோலுடன், மீனம்பாக்கம்,, விமான நிலையம் சென்று, 9 மணி விமானத்தில் ஏறி மதுரை வந்தேன்.....
அன்றைய தினம் காலை 11 மணிக்கே... எம்.ஜி.ஆர். சென்னை வந்தார், என்ற தலைப்பில் நான் எடுத்த படங்களுடன், தினமலர் ,விசேஷ பதிப்பு வந்து , அதை மக்கள் வாங்கி மகிழ்ச்சியுடன் பார்த்த நிகழ்ச்சியை, எப்படி மறக்க முடியும்.! ..(இப்போது போல் கணினி மூலம் படம் அனுப்ப வசதி இல்லாத நேரம் .)
Face book நண்பர்களுக்காக நான் சிரமப்பட்டு எடுத்தபடம் பதிவிட்டுள்ளேன்
எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்.,Madurai
அன்புத் தம்பி
;
எம்.ஜி.சக்கரபாணி
என் தம்பி ராமச்சந்திரன் பிப்ரவரி நாலாம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பற செய்தி வந்தவுடனே எனக்குள் ஒரே சந்தோஷம். வயசு குறைஞ்சிட்டமாதிரி ஒரு நினைப்பு. தம்பி வரப்போற நாளை எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்.
இந்தச் செய்தி வந்ததிலிருந்து படுக்கையில் படுத்தபடியே பழைய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா அசை போட்டுகிட்டேயிருக்கேன். ராமச்சந்திரன் குழந்தையா இருந்தப்பவே நாங்க கும்பகோணத்தில் இருந்தோம். குடும்பத்தில் நிறைய வறுமை. அங்க திக்குவாயன்கடைன்னு உண்டு. காலணாவுக்கும் அரையணாவுக்கும் கடைக்குப் போய் பொருட்கள் வாங்கி வருவேன். எங்க போனாலும் தம்பியை தோளில் தூக்கிக்கிட்டே போவேன். சின்ன வயசில இருந்தே எதுக்கும் கலங்க மாட்டான். என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோம் என்ற எண்ணம் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் 'எல்லாம் நல்லதுக்குத்தான் 'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உண்டு. அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்திருக்கு. ராமச்சந்திரனுடைய மனதைரியத்துக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அவனுடைய முதல் மனைவி தங்கமணிக்கு உடல்நிலை ரொம்ப சீரியஸ்னு ஊர்லஇருந்து செய்தி வந்தது. ராமச்சந்திரன் கிளம்பிப் போனபிறகு அவள் செத்துப்போய்ட்டான்னு தந்தி வந்தது. தம்பிக்கு சின்ன வயசு. மனசு கலங்கிடப் போறான்னு நான் ஆறுதல் சொல்ல ஊருக்குப் புறப்பட்டேன். அங்க போன பிறகு நான் வருத்தப்படக்கூடாதேன்னு அவன் தான் எனக்கு தைரியம் கூறிக் கொண்டிருந்தான். முதன் முதலா ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த படம் "சாயா". நாராயணன் கம்பெனி தான் தயாரிப்பாளர்கள். அப்ப அகில இந்திய புகழ் பெற்ற நந்தாலால் யஷ்வந்த்லால்தான் டைரக்டர். அப்பல்லாம் ஒன்றரை லட்சம் ரூபாயிருந்தால் ஒரு படத்தையே முடிச்சுடலாம். 52,000 ரூபாய் வரை செலவழிச்சு படம் எடுத்த பிறகு ஏதோ காரணத்தினால் படம் நின்னு போச்சு. இந்தப் படம் வெளிவந்தா நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு தம்பி நினைச்சு கிட்டிருந்தப்போ அந்த ஆசையில் மண் விழுந்தது. இது என்ன சோதனைன்னு நான் ரொம்ப மனம் கலங்கிப் போய் வேதனைப்பட்டேன். தம்பி என்னைக் கூப்பிட்டு ஆறுதல் சொன்னான். என்னை 'ஏட்டா';ன்னு தான் கூப்பிடுவான். கவலைப்படாதீங்க ஏட்டா ஏதோ நல்லது நடக்கப் போறதுக்கான அறிகுறி இதுன்னு சொன்னான். அதுக்கப்புறமும் விடாமுயற்சி செய்ததினால ராஜகுமாரி படத்தில் மறுபடியும் ஹீரோ சான்ஸ் கிடைத்தது. எடுத்த காரியத்தை தைரியமா செய்யனும் அதுல என்ன இடைஞ்சல் வந்தாலும் கவலைப்படக்கூடாதுன்னு நினைப்பான். முடியாதுன்னு சொன்னால அவனுக்குக் கோபம் வந்துடும். 1956ல் நாடோடிமன்னன் படம் எடுக்க ஆரேம்பிச்சோம். நிறைய பணம் செலவழிச்சோம். படம் எடுத்து முடிக்கிறதுக்குள்ள ஏராளமான இடைஞ்சல்கள். ஸீன் நல்லா வரணும்னா அதுக்காக தம்பி என்ன வேணும்னாலும் செய்வான். ஷூட்டிங் நடந்தபோது திடீர்னு மூணு லாரி கயிறு வேணும்னான். கையில பணமில்லை. தம்பிகிட்ட இதச் சொல்ல முடியாது. எப்படியோ சமாளிச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு போனோம். படத்தில் ஒரு கயிறு பாலம் வரும். அந்த ஸீன் ரொம்ப நல்லாவும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து முடிச்சப்ப இந்தப் படம் சக்ஸஸ் ஆனா எம்.ஜி.ஆர் மன்னன் இல்லையானா நாடோடி என்று பத்திரிக்கையிலேயெல்லாம் எழுதினாங்க. படம் பிரமாதமா ஓடிச்சு. எல்லா படங்களுக்கும் நூறாவது நாள் , இருநூறாவது நாள்ன்னு தான் விழா எடுப்பாங்க. நாங்க நாடோடிமன்னன் பட வெற்றி விழான்னு தான் அறிவிப்பு செஞ்சி விழா நடத்தினோம். சீர்காழியில் நாடகத்தில் நடிச்சுகிட்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சியில் குண்டுமணி தம்பி கால் மேல விழுந்து எலும்பு முறிஞ்சு போச்சு . இனி இவன் கால் சரியா போயி பீல்டில் எங்க நிக்கப் போறர்ன்னு பேசினாங்க. கால் சரியாகி திரும்பி பீல்டுக்கு வந்த போது ஏகப்பட்ட படங்கள் குவிஞ்சது. அதுக்கப்புறம் தான் எம். ஆர். ராதா சுட்ட சம்பவம். இனி எம்.ஜி.ஆர் எழுந்து வரவே முடியாது அப்படி வந்தாலும் பேசவே முடியாதுன்னு சொன்னாங்க. அந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழக மக்கள் மனசில நிலையான இடம் தம்பிக்குக் கிடைச்சது. குண்டு காயத்தோட ஓட்டுக் கேக்கிற மாதிரி போஸ்டர் போட்டாங்க. தமிழ்நாடு பூராவும் அவனுக்காக பிரார்த்தனை செய்தாங்க . அதுக்கப்புறம் புகழ் இன்னும் அதிகம் ஆயிருச்சு.
1972-ல் தி.மு.கவிலிருந்து தம்பியை நீக்கினாங்க. சத்யா ஸ்டுடியோவில் பலர் ‘நீங்க மன்னிப்பு கேட்டுடுங்க’ன்னு சொன்னாங்க. தம்பி மனம் கலங்கிடக்கூடாதேன்னு தைரியம் சொல்லப் போனேன். என்னை பார்த்தவுடனேயே நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ஏட்டா நான் இப்பத்தான் பால் பாயாசம் குடிச்சேன். ஒரு கை பார்த்திடுவோம்ன்னு சொன்னான். என்னப்பா செய்யப் போறேன்னு கேட்டேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னான். அந்த தைரியத்தைப் பார்த்து நானே அசந்து போனேன். 1972-ல் வந்த கஷ்டம் என்ன செஞ்சுது? தம்பிய முதலமைச்சராவே ஆக்கிடுச்சு. 1984-அக்டோபர் 13 அன்னிக்குத்தான் தம்பியை பார்க்க அப்போலோ ஆஸ்பத்திரியில் என்னை அனுமதிச்சாங்க நான் உள்ளே போனவுடனேயே ஏட்டா உடம்பு எப்படியிருக்கு? நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்களா ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டான். அவன் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க நான் போனா என்னை விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். என்னைப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் இன்னும் ஒரு வாரத்திலே வந்துடுவேன்னு சொன்னான். எந்த சமயத்திலேயும் அவன் தைரியத்தை விட்டதே கிடையாது. நான் அங்கேயிருந்து கிளம்பும் போது டாக்டர்.பி.ஆர்.எஸ்ஸைக்கூப்பிட்டு அண்ணனை நல்லா கவனிச்சுக்கோங்கன்னு சொன்னான். இப்படி சோதனைகள் வந்தா அதைத் தாங்கிக்கிட்டு அதை சாதனையாக்கிக் காட்டற சாமர்த்தியம் தம்பிக்கு நிறைய உண்டு. தம்பியுடைய வெற்றியைப் படிப்படியா கவனிச்சு ,ரசிச்சு பிரமிச்சவன் நான். பல பேர் தம்பியை வரவேற்கத் தயாராயிருக்காங்க. பொன்மனச்செம்மலே வருக புரட்சித்தலைவரே வருக, இதய தெய்வமே வருக ன்னு எல்லோரும் வரவேற்பாங்க. ஆனா எல்லா வரவேற்பையும் விட நான் என் தம்பியை ‘ராமச்சந்திரா நீ புதுப்பொலிவோடு வா’ ன்னு சொல்றதுலே இருக்குற அர்த்தமே வேற .1984 பிப்ரவரி 2ஆம் தேதி ஜுனியர் விகடனுக்கு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அளித்த பேட்டி...
வாழ்க! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 

Devaraj Andrews

Leave a comment

Comment