TamilsGuide

மன்னார் மாவட்ட அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று  மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஒருங்கமைப்பில் , அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சத்தியலிங்கம், ரவிகரன், ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் வீதிகள் புனர் நிர்மாண வேலைகள், போக்குவரத்து, நகர அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடுகள் தொடர்பான விடயங்கள் உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.

மேலும் மன்னாரில் இருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறந்து மக்களின் பாவனைக்கு விடுமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 

Leave a comment

Comment