உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியான டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷிய படைகள் செவ்வாய்க்கிழமை நடத்திய பயங்கர ஏவுகணைத் தாக்குதலில் தாய் மற்றும் அவரது 11 வயது மகள் ஆகிய இருவா் உயிரிழந்தனா்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிா்வாகத்தின் முன்னெடுப்பில், முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷியா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் குடியிருப்புகளை இலக்காகக் கொண்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏவுகணைகள் வீசப்பட்டன. இத்தாக்குதலில் வீடுகள் பலத்த சேதமடைந்து தரைமட்டமானதுடன், இடிபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தாய் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும் 7 வயது சிறுமி உள்பட 14 போ் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய ஆளுநா் வதிம் ஃபிலாஷ்கின் தெரிவித்துள்ளாா்.
தாக்குதலைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினா், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்டனா்.
அப்பகுதியில் மின்சாரம் மற்றும் குடிநீா் கட்டமைப்புகள் ஏற்கெனவே துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றன.
போா் 4 ஆண்டுகளை நெருங்கும் சூழலில், அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு உக்ரைன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘ரஷியா ஒரு பயங்கரவாத அரசு என்பதற்கு இதுவே சாட்சி’ என்று ஆளுநா் ஃபிலாஷ்கின் சாடியுள்ளாா். ரஷியாவின் அத்துமீறல்களை முறியடிக்க சா்வதேச நாடுகள் கூடுதல் ராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாபதி அலுவலகம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.


