TamilsGuide

நடிகர் திலகத்தின் வாழ்வோடு டி.எம். சௌந்தரராஜன் எனும் பேரலை வந்து மோதிய அந்த வரலாற்றுத் தொடக்கம்

பொங்கி வரும் மலையருவியாய் நடிகர் திலகத்தின் வாழ்வோடு டி.எம். சௌந்தரராஜன் எனும் பேரலை வந்து மோதிய அந்த வரலாற்றுத் தொடக்கத்தை பார்ப்போம்...

'தூக்கு தூக்கி' திரைப்படத்தின் எட்டுப் பாடல்களும் ஒரு பெருமழைக்கான மேகங்களாகக் காத்திருந்தன. திருச்சி லோகநாதன் எனும் இசை மேகம் விலகிச் செல்ல, மதுரை மண்ணிலிருந்து ஒரு புயலென டி.எம்.எஸ் உள்ளே நுழைகிறார்.

தயாரிப்பாளர்களின் சிக்கல் தீர்ந்தாலும், சிவாஜி எனும் இமயத்தின் அங்கீகாரம் எனும் பெரும் சிகரத்தை அவர் எட்ட வேண்டியிருந்தது.

"சி.எஸ். ஜெயராமன் தான் வேண்டும்" என்று சிவாஜி பிடிவாதம் பிடிக்க, டி.எம்.எஸ்ஸோ சூறைக்காற்றின் துணிச்சலோடு ஒரு சவால் விடுகிறார்:

"மூன்று பாடல்கள்... நான் பாடுகிறேன். அவை அலை ஓசையாய் அவர் செவிகளில் மோதட்டும். அவருக்குப் பிடித்தால் நான் தொடர்கிறேன், இல்லையென்றால் பிரதிபலன் ஏதுமின்றி ஒரு காற்றைப் போல மறைந்து விடுகிறேன்!"

முதலில் 'சுந்தரி சௌந்தரி நிரந்தரியே', பின் 'பெண்களை நம்பாதே', இறுதியாக 'ஏறாத மலைதனிலே' என அந்த இசைக் குரல் பிரவாகமாக ஒலிப்பதிவு கூடத்தில் பாய்கிறது. படப்பிடிப்பு முடிந்து மின்னல் வேகத்தில் காரில் வந்து இறங்குகிறார் சிவாஜி.

ஒலிப்பதிவு கூடத்திற்குள் பாடல்கள் ஒலிக்கின்றன. 'கண்டால் கொல்லும் விஷமாம்' என்ற வரி வரும்போது, அமர்ந்திருந்த சிவாஜி எரிமலையாய் சிலிர்த்து எழுகிறார்! 'தாம் திமிக்கன தந்தக்கோனாரே' என்ற துள்ளல் இசை வந்தபோது, அவர் கைகள் மேசை மீது கடல் அலைகளின் சீற்றத்தோடு தாளம் போடத் தொடங்கின.

பாடல் முடிந்ததும், தன் நடிப்புக்கு நிகரான அந்த இசைப் பிரவாகத்தைப் பாடியது யார் என்று சிவாஜி வியக்கிறார். "மதுரைப் பையன்" என்று அறிமுகப்படுத்தப்பட்ட டி.எம்.எஸ்ஸின் தோளில் தட்டி, "நீங்களே எல்லாப் பாடல்களையும் பாடுங்கள்" என அந்த மகா நதி வாழ்த்துகிறது.

எட்டுப் பாடல்களும் மலையருவியின் வேகம் குறையாமல் பதிவாகின்றன. அன்றிலிருந்து இன்று வரை, நடிகர் திலகம் எனும் கடலுக்கு, டி.எம்.எஸ் எனும் ஆயிரக்கணக்கான ஆறுகள் சங்கமித்துக் கொண்டே இருக்கின்றன!

செந்தில்வேல் சிவராஜ்

Leave a comment

Comment