" வெள்ளைக்காரன் ஆட்சிப் போக வேண்டும் என்று என்ன காரணத்தாலே வெள்ளைக் காரனைப் போகச்சொன்னார்கள்? வெள்ளைக்காரனுக்கு ஆளத் தெரியவில்லை என்றா? வெள்ளைக்காரனுக்கு ஆற்றல் இல்லை; அறிவு இல்லை என்றா? அப்படி ஒன்றும் இல்லை. வெள்ளைக்காரனுக்கு அறிவு இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது. அவன்தான் முதன் முதலில் இரயிலைப் பார்க்கச் செய்தான் நம்மை. நமக்குச் தசரதன் காலத்திலே தபாலாபீஸ் இல்லை. இராமன் காலத்திலே இரயில் வண்டி பார்த்ததில்லை. அரிச்சந்திரன் காலத்திலே ஆகாய விமானத்திலே போனது இல்லை. மற்றும் இருந்த பெரியவர்கள் காலத்தில் எல்லாம் நம்முடைய நாட்டுக்குத் தேவையான எந்த வசதியும் இருந்தது இல்லை.
வெள்ளைக்காரன் காலத்திலே தான் வசதி கிடைத்தது. அவ்வளவு ஆற்றல் படைத்தவன், ஆனாலும் அறிவு மிகுந்தவன். ஆனாலும் அவன் அந்நியன், ஆகையினாலே வெளியேற வேண்டும் என்ற ஒரே வாதத்தைத்தான் சொன்னோம்.
அந்நியன் என்ற காரணத்தாலே வெள்ளைக்காரனை வெளியே போகச் சொன்னது போல், வட நாட்டுக்காரர்களும் அந்நியர்கள், ஆகையினாலே அவர்கள் ஆட்சியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று எடுத்துச் சொல்வது எந்த வகையில் தப்பு என்று கேளுங்கள். எந்த வகையில் அது நியாயக் குறைவு என்று கேட்டுப் பாருங்கள்.
வடநாட்டுக்காரர்கள் வெள்ளைக்காரர்களைப் போல, அமெரிக்க நாட்டுக்காரர்களைப் போல, நமக்கு அந்நியர்கள் என்பதற்கு ஆயிரத்து எட்டு எடுத்துக்காட்டுகளை, நாங்கள் மேடை தவறாமல் தந்து வந்திருக்கிறோம். வெள்ளைக்காரன் நமக்கு எதனாலே அந்நியன். அவன் பேசினால் நமக்குப் புரியாது;
நாம் பேசுவது அவனுக்குத் தெரியாது. நாம் பேசுவது தமிழ்; அவன் பேசுவது ஆங்கிலம், ஆகையினாலே அந்நியன் என்றோம். அதே அடையாளத்திலே நீங்கள் வடநாட்டுக்காரனைப் பார்த்தால், நாம் பேசுவது தமிழ், அவன் பேசுவது இந்தி, துன்முகி அல்லது வங்காளி, பீகாரி என்று ஏதாவது ஒருவகை மொழியாக இருக்கும். மொழியிலே நமக்கும் அவனுக்கும் ஒற்றுமை இல்லை.
நாம் நாலு முழம் வேட்டி கட்டுகிறோம். அவன் பன்னிரண்டரை கட்டுகிறான். நாம் முன்னாலே சொருகுவோம். அவன் பின்னாலே இழுத்துச் சொருகினால்தான் துணி நிற்கும். நாம் ஆறு கண்டால் குளிப்போம். அவன் ஆறு கண்டால் கன்னத்திலே போட்டுக் கொள்ளுவான். நாம் காடுகிடைத்தால் வேட்டைக்குச் செல்வோம். அவன் காடுகளைப் பார்த்தால், இங்குதான் இராமசந்திரன் சீதாபிராட்டியோடு போனார் என்று கருதி கன்னத்திலே போட்டுக்கொள்ளுவான்.
நாம் நாளைக்கு ஒரு தடவையாவது குளிப்பதுதான் உடலுக்கு ஆரோக்கியம் என்று கருதுவோம். அவன் கங்கைக்குப் போனாலும், காவேரிக்குப் போனாலும், இராமேஸ்வரத்திற்குப் போனாலும், போட்ட சட்டையைக் கழற்றாமல், இருக்கிற தண்ணீரைக் மொண்டு மேலே ஊற்றிக் கொண்டு தானாக உலரட்டும் என்று விட்டுவிடுவான். கடை வீதியிலே நம்முடைய தோழர்கள் உட்கார்ந்து வியாபாரம் செய்வார்கள்.
வடநாட்டுக்காரனுக்கு நீங்கள் கடை கொடுத்துப் பார்த்தால் தெரியும். அவன் படுத்துக் கொண்டேதான் வியாபாரம் செய்வான். நம்முடைய கணக்கெல்லாம் இடப்புறம் இருந்து வலப்புறம் எழுதுவோம். அவனுடைய கணக்கெல்லாம் மேலே இருந்து கீழே எழுதுவான். நாம் அரிசிச் சாதம் சாப்பிடுவோம். அவன் கோதுமை உணவு சாப்பிடுவான். எதிலே நாமும் அவனும் ஒன்று? "
Chandran Veerasamy


