TamilsGuide

கனடாவில் இரத்த அழுத்த மருந்து பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்து தொடர்பாக ஏற்பட்ட சிக்கலால், நாடு முழுவதும் அவசர திரும்பப்பெறல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய சுகாதார திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. MAR-Amlodipine 5 mg மாத்திரைகளின் இரண்டு தொகுதிகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.

சில மருந்து போத்தல்களில் தவறான மருந்து நிரப்பப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MAR-Amlodipine பொதுவாக உயர்ந்த இரத்த அழுத்தம் மற்றும் மார்பு வலி சிகிச்சைக்காக வழங்கப்படும் மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் உற்பத்தியாளர் Marcan Pharmaceuticals Inc. நிறுவனத்தின் தவறுதலால், குறைந்த இரத்த அழுத்தத்தை சிகிச்சை செய்யப் பயன்படுத்தப்படும் Midodrine 2.5 mg மாத்திரைகள் சில MAR-Amlodipine பாட்டில்களில் நிரப்பப்பட்டிருக்கலாம் என கனடிய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

சரியான MAR-Amlodipine 5 mg மாத்திரைகள்:

• எட்டு பக்கங்களுடன் (octagonal shape) இருக்கும்

• வெள்ளை அல்லது ஓரளவு வெண்மை நிறத்தில் இருக்கும்

• “210” மற்றும் “5” என்ற எண்கள் அச்சிடப்பட்டிருக்கும்

தவறுதலாக நிரப்பப்பட்ட Midodrine 2.5 mg மாத்திரைகள்:

• வட்ட வடிவில் இருக்கும்

• “M2” என்ற குறியீடு பொறிக்கப்பட்டிருக்கும்

உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகள் தவறுதலாக Midodrine எடுத்தால், ஆபத்தான அளவில் இரத்த அழுத்தம் அதிகரித்தல், தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் உடல் உறுப்புகள் சேதமடையும் அபாயம் ஏற்படலாம் என கனடிய சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. 
 

Leave a comment

Comment