இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய இலங்கை கூட்டு ஆணையத்தின் 27 ஆவது அமர்வை 2026, பெப்ரவரி 12 அன்று கொழும்பில் நடாத்தவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உயர்மட்டச் சந்திப்பானது, நிர்வாகம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் ஏனைய இருதரப்பு மற்றும் பிராந்திய முன்னுரிமைகள் உள்ளிட்ட பல துறைகளில் கூட்டாண்மையை மீளாய்வு செய்து, வலுப்படுத்தும்பொருட்டு இரு தரப்பிலிருந்தும் சிரேஷ்ட திகாரிகளை ஒன்றிணைப்பதாக அமையும்.
கூட்டு ஆணையத்திற்கு இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய வெளிவாரி நடவடிக்கை சேவையின் (EEAS) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பதிற்கடமை முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி பாவோலா பம்பலோனி ஆகியோர் இணை தலைமை தாங்கவுள்ளனர்.
வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவானது, இலங்கையின் சிரேஷ்ட பிரமுகர்களைச் சந்தித்து, தற்போதைய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான கூட்டு அணுகுமுறைகள் மற்றும் உறுதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.


