எம்.கே.ராதாவின் தந்தை எம்.கந்தசாமி முதலியார். சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்கள் நடந்தன. அதன் உரிமை யாளர் சச்சி தானந்தம் பிள்ளை. நாட கங்களை எழுதி இயக்கி யவர் கந்தசாமி முதலியார். இந்த நாடகக் கம்பெனி யில் சிறுவயதில் எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும் சேர்ந்தனர். எம்.கே.ராதாவைப் போலவே எம்.ஜி.ஆரையும் சக்ரபாணி யையும் தனது பிள்ளைகளாகக் கருதி யவர் கந்தசாமி முதலியார். அதே நேரம் கண்டிப்பானவர். ஒற்றைவாடை தியேட்டரில் 6 மாதங்களுக்கு மேல் மற்ற கம்பெனிகளின் நாடகங்கள் நடக்காத நிலையில், ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியினர் மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து நாடகங்கள் நடத்தினர்.
அந்தக் கம்பெனியில் எம்.கே.ராதா வும் நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். மீதும் அவரது அண்ணன் சக்ரபாணி மீதும் எம்.கே.ராதாவுக்கு கூடுதல் அன்பு உண்டு. மூன்று பேரும் ஒன்றாகத்தான் இருப்பார்கள். தனியா கவோ தந்தையுடனோ எம்.கே.ராதா வெளியே சென்றால் தின்பண்டங்கள் வாங்கி வைத்திருந்து இருவருக்கும் ரகசியமாக கொடுத்து சாப்பிடச் சொல்வார். ‘‘எதிர்காலத்தில் பெரிய நடிகனாக வருவாய்” என்று எம்.ஜி.ஆரை ஊக்கப்படுத்துவார்.
சக்ரபாணியைப் போலவே மேலும் மூன்று பேரை தனது உடன்பிறவா அண் ணன்களாக கருதியதை எம்.ஜி.ஆரே இப்படி குறிப்பிடுகிறார். ‘‘என்னைப் பெற்ற அன்னை பெரும் செல்வமாக ஒரு அண்ணனைத் தந்தார். கலைத் தாய் எனக்கு இரண்டு அண்ணன்களைத் தந்தார். கலைவாணரும் எம்.கே.ராதா அண்ணனும்தான் அந்த இருவர். அறிவுச் செல்வமான பேரறிஞர் அண்ணாவை எனக்கு பெரும் சொத்தாக, வழிகாட்டியாக, இணை யற்ற தலைவராக எல்லாமுமாக ஒரு அண்ணனை அரசியல் எனக்குத் தந்தது’’.
அந்த அளவுக்கு எம்.கே.ராதாவை எம்.ஜி.ஆர். தனது அண்ண னாக மதித்தார். தனது தம்பியான எம்.ஜி.ஆர். பற்றி எம்.கே.ராதா, ‘‘தம்பி நடித்த வேடங்களில் அவரைப் போல யாரும் நடிக்கவே முடியாது. அவருடைய பாணியே தனி. அதற்கு கிடைத்த மகத்தான பரிசுதான் மக்கள் ஆதரவு. அவர் நடித்த படங்கள் யாவுமே என்றைக்கும் வெற்றிப் படங்கள்தான். சண்டைக் காட்சி களைப் பற்றி பேசினால் அந்த மூன்று எழுத்துக்கள்தான் (எம்.ஜி.ஆர்.) முன் னால் வரும்’’ என்று பாராட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர். முதல்வரானபோது, எம்.கே.ராதா உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். தனது தம்பியை நேரில் பார்த்து வாழ்த்து சொல்ல ஆசை. ஆனாலும் உடல்நிலை தடுத்தது. பதவியேற்பு விழாவை பார்க்க முடியாவிட்டாலும் மனதார வாழ்த்தினார். மறுநாள் காலை. எம்.கே.ராதாவின் வீட்டு முன் போலீஸ் வாகனங்கள் வந்து நிற்கின்றன. போலீஸ் அதிகாரி ஒருவர் வீட்டுக் குள் சென்று, ‘‘இன்னும் சற்று நேரத் தில் முதல்வர் இங்கு வருகிறார்’’ என்றார்.
இன்ப அதிர்ச்சி விலகாத நிலையில், முதல்வரானபோதும் தன்னைத் தேடி வந்த தம்பியைக் கண்டு எம்.கே.ராதாவின் கண்கள் கலங்கின. அவரிடம் எம்.ஜி.ஆர். ஆசி பெற்றார். ‘‘இந்த நிலையில் உன்னைப் பார்க்க என் தந்தையும் உன் அன்னையும் இல்லையே’’ என்று எம்.கே.ராதா சொன்னபோது, இருவரின் கண்களும் அருவியாயின.
எம்.ஜி.ஆர். முதல்வரானதால் மகிழ்ச்சியடைந்து எம்.கே.ராதா கூறி னார்... ‘‘நடிப்புத் தொழில் செய்பவர் களுக்கு என்ன தெரியும் என்று கேட்ட வர்களுக்கு பதிலாகத்தான் தம்பி எம்.ஜி.ஆர். நாடாள்கிறார். நாடகத்தில் ராஜா வேடத்தில் நடித்த எங்களுக்கு, நிஜமாகவே ஆட்சி புரியவும் முடியும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்திருக்கிறார். சத்தியவதி வயிற்றில் பிறந்த சத்தியம் நாடாள்கிறது!’’
- தி இந்து


