சோசலிசக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் வெனிசுவேலா மீது அதிரடித் தாக்குதல்களை நடத்தி அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ மற்றும் அவரது இணையர் ஆகியோரைக் கடத்தி வந்து அமெரிக்காவில் சிறை வைத்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது அடுத்த ஆட்டத்தை பொதுவுடமை நாடான கியூபா மீது நடத்துவதற்குத் தயாராகி விட்டதைப் பார்க்க முடிகின்றது. 65 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை உட்பட பல தடைகளை விதித்து, அந்த நாட்டை வழிக்குக்(?) கொண்டுவர தொடர்ச்சியாக அமெரிக்காவின் ஜனாதிபதிகளாகப் பதவி வகித்த பலரும் மறைமுகமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த போதிலும், நீண்ட காலத்திற்குப் பின்னர் முதல் தடவையாக நேரடி மோதலில் இறங்கியுள்ளார் ட்ரம்ப்.
கியூபாவுக்கான எரிபொருள் தேவைகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்வதன் மூலம் அந்த நாட்டின் ஆட்சியாளர்களைப் பணிய வைப்பதே ட்ரம்பின் இலக்காக உள்ளது. பிராந்தியத்தில் அதிகரித்துவரும் தனது போட்டியாளரான சீனாவின் செல்வாக்கைக் குறைத்துவிட இதன் மூலம் அவர் முயல்வது போலத் தெரிகிறது. தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர் பல்வேறு சொல்லாடல்களைக் கையாள்கிறார், நிபந்தனைகளை விதிக்கிறார், அச்சுறுத்தல்களை விடுக்கிறார்.
அமெரிக்காவின் தெற்கே கரீபியன் பிராந்தியத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய தீவான கியூபா 1959 யனவரி 1 முதல் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலும் பின்னர் அவரின் சகோதரர் ரவூல் காஸ்ட்ரோ தலைமையிலும் தன்னை ஒரு பொதுவுடமை நாடாக நிலைநிறுத்திக் கொண்டது. வரலாற்றில் மறக்க முடியாத தலைவராக பிடல் காஸ்ட்ரோவும், அவரது சகாவான உலகப் புரட்சியாளர் சே குவேராவும் இன்று வரை உலகப் புரட்சியாளர்களாலும், பொதுவுடமைத் தத்துவத்தைப் பின்பற்றுவோராலும் மதிக்கப்பட்டும் போற்றப்பட்டும் வருகின்றமையை நாம் நன்கு அறிவோம்.
பனிப்போர்க் காலத்தில் உலகின் பல நாடுகளுக்கும் தனது படைகளை, படைக் கலங்களை, ஆலோசகர்களை அனுப்பிவைத்து அந்த நாடுகளின் சுதந்திரப் போராட்டங்களுக்கும், வர்க்கப் போராட்டங்களுக்கும் ஆதரவு தந்த நாடு கியூபா. உலகின் அண்மைய வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டமாக அறியப்பட்ட கொரோனாப் பேரிடர் காலகட்டத்தில் தனது மருத்துவர்களை உலக நாடுகளுக்கு அனுப்பிவைத்து பெருமை தேடிக் கொண்டது அந்த நாடு. உலகின் எந்தவொரு நாட்டில் அடக்குமுறை நிலவினாலும் அந்த நாடுகளின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொது வெளியிலும், உலக மன்றங்களிலும் ஆதரவுக் குரல் எழுப்பும் நாடுகளுள் முதன்மையானது கியூபா. 70களின் நடுப்பகுதியில் உருவான அணிசேரா நாடுகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு, அந்த அமைப்பில் முதன்மைப் பாத்திரம் ஏற்று உலகுக்கு வழி காட்டியது அந்த நாடு.
ஒரு கோடி மக்கள் தொகையைக் கொண்ட கியூப நாட்டின் பிரதான வருவாயை கரும்பு உற்பத்திப் பொருட்களே வழங்குகின்றன. தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளைச் சந்தித்துவரும் கியூபா தனது எரிபொருள் தேவைகளுக்காக பெரிதும் வெளிநாடுகளிலேயே தங்கியிருக்கின்றது. குறிப்பாக மதுரோ தலைமையிலான வெனிசுவேலா கடந்த வருடம் டிசம்பர் வரை கியூபாவின் எரிபொருள் தேவையை பெரிதும் பூர்த்தி செய்து வந்தது. அதே வரிசையில் மெக்சிகோ மற்றும் ரஸ்யா ஆகியனவும் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தன.
வெனிசுவேலாவில் அதிகார மாற்றத்தைக் கொண்டுவந்த ட்ரம்ப், கியூபாவுக்கான எரிபொருள் விநியோகத்தைத் துண்டித்துள்ளதுடன், கியூபாவுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்திக் கொள்ளுமாறு மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தலுக்கு மெக்சிகோ அரசும் பணிந்து போயுள்ளமையைப் பார்க்க முடிகின்றது.
கியூபாவைப் பொறுத்தவரை அந்த நாட்டிற்கு நாளொன்றுக்கு 110,000 முதல் 112,000 பீப்பாய் எண்ணைய் தேவைப்படுகின்றது. இதில் 40,000 பீப்பாய் சொந்த நாட்டில் உற்பத்தியாகிறது. கியூபாவுக்குத் தேவையான எண்ணெயின் பெரும் பகுதி வெனிசுவேலாவில் இருந்தே கிடைத்து வந்தது. தினமொன்றுக்கு 100,000 பீப்பாயாக இருந்த இந்த வரவு கடந்த வருட இறுதியில் 30,000 பீப்பாயாகக் குறைந்து போனது. மதுரோ கடத்திச் செல்லப்பட்டதன் பின்னான சூழலில் இந்த விநியோகம் தற்போது முற்றாகத் தடைப்பட்டு விட்டது.
அமெரிக்காவின் அயல் நாடான மெக்சிகோ தினமும் 22,000 பீப்பாய் எண்ணையை வழங்கி வந்தது. கடந்த வருடம் செப்டெம்பரில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ மெக்சிகோ சென்று நடத்திய பேச்சுகளைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை 7,000 பீப்பாய்களாக வீழ்ச்சி கண்டது. புதிய வருடத்தில் யனவரி மாதத்தில் மெக்சிகோவில் இருந்து கிடைத்த எண்ணெய் வெறும் 84,900 பீப்பாய்கள் மாத்திரமே. தற்போது இதுவும் நின்று போனது.
கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் மற்றொரு நாடான ரஸ்யா நாளொன்றுக்கு 6,000 பீப்பாய் எண்ணெயையே வழங்கி வருகின்றது. இந்த விநியோகம் தற்போதைய நிலையில் தொடருமா அல்லது ஏனைய நாடுகளைப் போன்று ரஸ்யாவும் அமெரிக்க அழுத்தத்துக்கு அடி பணியுமா என்ற கேள்வி எழுகின்றது.
எண்ணெய் விநியோகம் தடைப்பட்டதன் விளைவு கியூபாவில் தற்போதே தெரியத் தொடங்கி விட்டது. மின்சார உற்பத்திக்கான எரிபொருளாக எண்ணெய் உள்ள நிலையில் தற்போது சில இடங்களில் 20 மணித்தியாலம் வரையான மின்வெட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. மருத்துவ சேவைகள் சீர்குலையத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. நோய் காரணமாக ஏற்படும் மரணங்களால் பிணவறைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கழிவகற்றும் வாகனங்கள் சேவையில் ஈடுபடாத நிலையில் தெருக்களில் குப்பைகள் குவியத் தொடங்கி உள்ளன. இதன் விளைவாக தொற்றுநோய்கள் பரவத் தொடங்கியுள்ளன.
ஹவானாவில் உள்ள கம்யூனிச அரசாங்கத்தை அச்சுறுத்தி, நெருக்கடிக்கு உள்ளாக்கிப் பணிய வைப்பதே அமெரிக்காவின் உத்தியாக உள்ளது. பெருமைமிகு வீர வரலாறைக் கொண்ட கியூப மக்கள் நேரில் வரும் எதிரியை எதிர்த்துப் போராடும் வல்லமை மிக்கவர்கள் என்பதில் கருத்துபேதம் இருக்க முடியாது. ஆனால், நிழல் எதிரியோடு எவ்வாறு மோதுவது?
கியூபாவில் அடுத்து என்னவாகும் என்ற கேள்வி தற்போது கியூப மக்கள் மனதில் மாத்திரமன்றி, கியூபாவை நேசிக்கும் உலக மக்கள் மத்தியிலும் உள்ளது. இன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்காவை மீறி கியூப மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட சீனா, ரஸ்யா உள்ளிட்ட வல்லரசுகளால் கூட முடியாது என்பதே யதார்த்தம். உயிரைக் கொடுத்தேனும் இலட்சியத்தைக் காப்பதா, இலட்சியத்தைத் துறந்தேனும் மக்களைக் காப்பதா என்ற கேள்வி தற்போதய கியூப ஆட்சியாளர்கள் முன்னால் உள்ளது. பெரும்பாலும் அவர்களின் தேர்வு இரண்டாவதாகவே இருக்க முடியும். மக்களைக் காப்பாற்ற முடியாத இலட்சியங்கள் வெற்றுக் கோசங்களே. உலக வரலாறில் இன்னும் சில நாட்களில், வாரங்களில், மாதங்களில் கியூபாவின் பெருமைமிகு வரலாறு முடிவுக்கு வரக் கூடும். ஆனால் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்ற கியூபாவின் அந்த 67 வருட நினைவுகள் கியூப மக்கள் மனதில் மாத்திரமன்றி, கியூபாவை உலகம் முழுவதிலும் இருந்து நேசித்த மக்கள் அனைவரின் மனதிலும் என்றென்றும் பசுமையாக விளங்கும் என்பதே உண்மை.
சுவிசிலிருந்து சண் தவராஜா


