TamilsGuide

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் – ஈவினை பகுதியில் மக்களுடன் முரண்பட்டதாகவும், இலஞ்சம் பெறுவதற்காகவே இவ்வாறு எல்லை தாண்டி வருவதாகவும், அவர்கள் மது போதையில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில்,

நான் எனது வயலுக்கு அருகாமையில் எனது காணியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன்.

இதன்போது எனது காணிக்குள் அத்துமீறி உள்நுழைந்த பலாலி பொலிஸார் நான் மதுபோதையில் நிற்பதாக தெரிவித்து முரண்பட்டதுடன் எனது ஆடையையும் கிழித்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதன்போது நான் ஊர் மக்களை துணைக்கு அழைத்தவேளை, அவ்விடத்தில் நின்ற பொலிஸார் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு மேற்கொண்டு ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அந்த இடத்திற்கு வரவழைத்தனர்.

இதன்போது ஏனைய பொலிஸாரும் அவ்விடத்திற்கு வந்து அட்டகாசம் செய்த வேளை நாங்கள் அதனை காணொளி பதிவு செய்ய முற்பட்டவேளை எங்களை காணொளி பதிவு செய்ய விடாமல் தடுத்தனர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சற்று தொலைவில் ஒரு மதுபான நிலையம் உள்ளது.

அங்கு மதுபானம் பாவித்து விட்டு வருபவர்களிடம் இலஞ்சம் பெறுவதற்காக பலாலி பொலிஸார் எல்லை தாண்டி வீதியில் வந்து நிற்பது வழமை. இவ்வாறான பின்னணியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.

இனிமேலும் பலாலி பொலிஸார் இவ்வாறு எல்லை தாண்டி வந்து எமக்கு தொந்தரவு செய்ய கூடாது. இதற்கு உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தகட்டு இலக்கமோ, அல்லது பெயர் பட்டியோ அணிந்திருக்கவில்லை என்பதுடன் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் கைபேசி மூலம் தகட்டு இலக்கத்தை மறைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
 

Leave a comment

Comment