TamilsGuide

இந்துக் கல்லூரி கொழும்பு,  ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா

இந்துக் கல்லூரி கொழும்பு,  ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா பக்திப் பரவசத்துடன் நிறைவேறியது

திருக்கயிலாயப் பரம்பரை தருமபுர ஆதீனத்தின் 27-வது குரு மகா சந்நிதானம் ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் அருளாசியுடன், கொழும்பு 4, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள இந்துக் கல்லூரி வளாகத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வித்தக விநாயகர் திருக்கோவிலின், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்றைய தினம்   வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த மகா கும்பாபிஷேகப் பெருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலைவிநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமங்களுடன் ஆரம்பமாகி. மாலை கிராமாசாந்தி, பிரவேசபலி மற்றும் முதற்கால யாகபூஜை என்பன இடம்பெற்றன.

தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜையும், பிற்பகல் பக்தர்களுக்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும், மாலை மூன்றாம் கால யாகபூஜையும் பக்திபூர்வமாக நடைபெற்றன.

கும்பாபிஷேக தினமான இன்றைய தினம் அதிகாலை 6.00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை என்பன நடைபெற்று காலை 7.05 மணி முதல் 8.33 மணிக்குள் அமைந்த சுப முகூர்த்த வேளையில், வேத பாராயணங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் சுவாமிக்கு மகாபிஷேகம், விசேட பூஜைகள் மற்றும் தீர்த்தப் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்தக் கும்பாபிஷேகப் புண்ணியக் கிரியைகளை பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய பிரதம குரு பிரதிஷ்டாபிரதம சிவாச்சாரியார்,  சிவஸ்ரீ சோமஸ்கந்த ரமேஷ் குருக்கள் தலைமையேற்று நடாத்தினார்.

சர்வ சாதகமாக சட்டத்தரணி பிரம்மஸ்ரீ ப. சனாதன சர்மா அவர்களும், ஆலய பிரதம குருவாக சிவஸ்ரீ க. ரமணீகரக் குருக்கள் அவர்களும் கடமையாற்றினர்.

மேலும் சிறப்பு குருமார்களாக சிவஸ்ரீ ரமணன் குருக்கள் (கொழும்பு), சிவஸ்ரீ ச. பிரசாந்த குருக்கள் (கனடா), சிவஸ்ரீ பால செந்தூரக் குருக்கள் (கொழும்பு) ஆகியோரும், சாதகர்களாக பிரம்மஸ்ரீ சுந்தர் கவிஷான் சர்மா (புத்தளம்), பிரம்மஸ்ரீ சு. இரத்தினபிரகாஷ் சர்மா (கொழும்பு), பிரம்மஸ்ரீ சி. குமரேசசர்மா (கொழும்பு) ஆகியோருடன் இணைந்து கிரியைகளை நெறிப்படுத்தினர்.

இந்த வைபவத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்கம் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு அருளாசி பெற்றனர்.

இன்றைய தினத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகப் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன், வரும் மார்ச் 28-ஆம் திகதி மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment