TamilsGuide

மீந்துபோன உணவைக் கழுவி மீண்டும் விற்பனை

மலேசியாவின் சிரம்பான் (Seremban) பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், எஞ்சிய உணவுகளைக் கழுவி மீண்டும் விற்பனைக்குத் தயார் செய்த அதிர்ச்சி காணொளி வெளியானதையடுத்து, அந்த உணவகத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி நள்ளிரவு நேரத்தில், அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர் சமைக்கப்பட்ட இறைச்சி, ஆட்டுக்கறி மற்றும் டோபு (Bean curd) போன்ற எஞ்சிய உணவுகளைத் தண்ணீரில் கழுவிக்கொண்டிருந்ததை வழிப்போக்கர் ஒருவர் கவனித்துள்ளார்.

அவர் அதனைத் தனது கைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார். சாட்சியாளர் அந்த ஊழியரை விசாரித்தபோது, அந்த உணவுகள் மீண்டும் சமைக்கப்பட்டு மறுநாள் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறப்படும் என்பதை ஒப்புக்கொண்டார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, சுகாதாரத் திணைக்களம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தது.

மலேசியாவின் 1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் 11ஆவது பிரிவின் கீழ், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் இந்த உணவகத்தை 14 நாட்களுக்கு மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். உணவுப் பாதுகாப்புத் தரத்தைப் பேணத் தவறியமைக்காக உணவக உரிமையாளருக்கு 750 மலேசிய ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 
 

Leave a comment

Comment