TamilsGuide

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்

தோற்றம்:15.09.1909 - மறைவு:03.02.1969 அன்பினில் மக்களைக் கட்டிப்போட்டு அனைவராலும் பாசத்தோடு 'அண்ணா' என்று அழைக்கப்பட்ட ஒரு மாமனிதர் சி.என்.அண்ணாத்துரை.
ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டிய அண்ணா, பிறகு நாடகங்களிலும் கவனம் செலுத்தி சந்திரோதயம், சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம், வேலைக்காரி,ஓர் இரவு என பல நாடகங்கள் எழுதினார். எல்லா நாடகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன எழுதும் அண்ணா சந்திரோதயம், சந்திரமோகன், நீதிதேவன் மயக்கத்தில் நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் நாடகத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் எம்.ஜி.ஆர். ஆனால் என்ன காரணத்தினாலோ தொடர்ந்து அதில் நடிக்கமுடியாத சூழல் உருவானது. அப்போது அந்த கதாபாத்திரத்துக்கு, தனது இல்லத்தில் தங்கியிருந்த கணேசன் என்ற நாடக நடிகரை நடிக்க வைத்தார்
ஒருநாள் அந்த நாடகத்தைக் காணவந்த பெரியார், கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “நாடகம் நடந்த இரண்டரை மணிநேரமும் நான் கணேசனை காணவில்லை. சிவாஜியையே கண்டேன்” என நெகிழ்ந்தார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்காக அண்ணா எழுதிய கதை “நல்லதம்பி. 'மிஸ்டர் டீட் கோஸ்டு டவுன்' என்கிற ஆங்கில படத்தை பார்த்து ரசித்த அண்ணா அதைத் தழுவி நல்ல தம்பி கதையை உருவாக்கினார். இதை என்.எஸ்.கிருஷ்ணன் திரைப்படமாக தயாரித்து 1949-ம் ஆண்டில் வெளியிட்டார்.
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி தொடங்கிய கிருஷ்ணன் நாடக சபாவிற்கு அண்ணாவால் எழுதப்பட்ட நாடகம் வேலைக்காரி வெற்றிகரமாக நடந்து வந்த இந்த நாடகமே திரைப்படமானது. ஜூபிடர் நிறுவனம் 'வேலைக்காரி' திரைப்படத்தை தயாரித்தது. ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கிய இந்தப் படம், 1949-ம் ஆண்டு வெளியாகி, இப்படத்தின் நாயாகன் .கே.ஆர்.ராமசாமிக்கு திரையுலகிலும், சமூகத்திலும் நன் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. 'வேலைக்காரி' படம், 100-வது நாட்கள் வரை பல திரையரங்குகளில் ஓடிய வெற்றிப்படமாகும்.
அண்ணாவிடம் ‘ஓர் இரவு’ நாடகத்தைப் பற்றி பேசிய மெய்யப்ப செட்டியார் திரைப்படத்திற்கு தகுந்தார் போல கதை வசனம் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டார். ஒரு நாள் இரவு பத்து மணிக்கு பேப்பருடன் உட்கார்ந்த அண்ணா, ஒரு அடித்தல் திருத்தல் இல்லாமல் முன்னூறு பக்கங்களில் ‘ஓர் இரவு’ கதை வசனத்தை சினிமாவுக்கு வேண்டிய முறையில் ஒரே இரவில் எழுதிக் கொடுத்துள்ளார்.
மேலும் மதிவாணன் என்ற பெயரில் அண்ணா நாடகமாக எழுதியிருந்த கதையை சொர்க்கவாசல் என்ற பெயரில் பரிமளா பிக்சர்ஸார் திரைப்படமாகத் தயாரித்தனர். அடுத்து 1956-ம் ஆண்டில் வெளிவந்தது ரங்கோன் ராதா போலி வேடதாரிகளின் தோலுரித்துக் காட்டும் வகையில் கதை அமைந்திருந்தது. திராவிட நாடு இதழில் வெளிவந்த அண்ணாவின் இக்கதையை மேகலா பிக்சர்ஸ் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டனர்.

ரங்கோன் ராதா விற்கு பின் அண்ணாவின் கதை அம்சத்தோடு தாய் மகளுக்குக் கட்டிய தாலி நல்லவன் வாழ்வான்,எதையும் தாங்கும் இதயம், காதல் ஜோதி, வண்டிக்காரன் மகன் ஆகிய படங்கள் வெளிவந்தன.
அண்ணாவின் வருகைக்கு முன்பு காவியப் படங்கள், அரசர்கள்களைப் பற்றிய படங்கள் தெய்வங்களைப் பற்றிய படங்கள் வந்துகொண்டிருந்த நிலையில் அண்ணாவின் வேலைக்காரிதான் சமானிய மனிதர்களைப் பற்றிய கதையை தமிழ்த் திரைத்துறையில் பேசிய முதல் படமாக வெளியாகி
திரைத்துறையில் புரட்சிகரமானதாக பார்க்கப்பட்டது.
அண்ணா வியாபார நோக்குடனோ, தொழிலாக கருதியோ திரை உலகில் நுழையவில்லை. அவரது திரைப்பட பங்களிப்பு கொள்கைத்தளத்திலேயே அடங்கியதாகும். அண்ணாவின் திரைப்பட நுழைவு. அவரது கதையும், கருத்தும், வசனமும் மக்களை ஈர்த்தன. கதை, வசனகர்த்தாக்கள், யாரென்று சுவரொட்டி விளம்பரங்களில் மக்கள் தேடத் தொடங்கினார்கள்.
கலைத்துறையில் அண்ணா அவர்களது பங்காக திரையுலகில் திராவிட தோழர்கள் அறிமுகம், திரை உலகில் மறுமலர்ச்சி, புதிய உத்திகள், அணுகுமுறை போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன.
புற்றுநோயின் தீவிரம் காரணமாக 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி காலமானார். அவரின் இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்துக் கலந்துக் கொண்டனர். அந்த நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பெற்றது.
அறிஞர் அண்ணாவின் இன்றைய நினைவு நாளை போற்றுவோம்🙏🏻
 

 

Leave a comment

Comment