சிவாஜியின் தம்பி வி.சி.சண்முகம் லண்டனில் படித்துவிட்டு வந்து அண்ணன் சிவாஜியின் பட விவகாரங்களைக் கவனிக்கத் தொடங்கியிருந்த நேரம். ராணுவ அதிகாரியைப் போல வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுபவர். ஆனால் பழக பனித்துளி போல மென்மையான மனிதர்.
விடிவெள்ளி படம் படத்தின் வெளிப்புறக் காட்சிகள் அனைத்தும் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் கிராமத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டன. படப்பிடிப்பு நடந்த நாட்களில் அந்த கிராமம் சித்திரைத் திருவிழா கண்டது போல அல்லோலகல்லோலப்பட்டது.
அப்போது நடந்த ஒரு சம்பவத்தை கோபுவால் மறக்க முடியாது. வேட்டைக்காரன்புதூர் கிராமத்து நிலச்சுவான்தார்களில் ஒருவர் முத்துமாணிக்கம். சிவாஜியின் நெருங்கிய நண்பர். படக் குழுவினருக்காக அனைத்து வசதிகளையும் அவர்தான் செய்து கொடுத்திருந்தார். முத்துமாணிக்கத்திற்குச் சொந்தமான விவசாயப் பண்ணையில் தென்னை, மா, பலா, வாழை, பாக்கு, நெல்லி என்று பசுமைப் பாய் விரித்திருந்த பிரம்மாண்டமான தோப்பு இருந்தது.
சுமார் 20 கயிற்றுக் கட்டில்களைத் தருவித்த சண்முகம் அவற்றை அந்த தோப்பில் வரிசையாகப் போட்டு வைத்தார். படப்பிடிப்பு முடிந்ததும் இரவு சிவாஜி உள்பட அனைவரும் அந்த கயிற்றுக் கட்டிலில்தான் படுத்துத் தூங்குவார்கள். சிலுசிலுவென்ற தென்றல் காற்று விடிய விடிய உடலைத் தழுவிக்கொண்டே இருக்கும். மாசு மருவற்ற காற்றை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே யாரும் மேல்சட்டை அணியாமல் அந்தத் திறந்தவெளி ரிசார்ட் சூழ்நிலையை அனுபவித்தார்கள்.
காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்தபின் பண்ணைத் தோப்பிலிருந்து சற்றுத் தூரத்தில் பக்கத்துத் தோட்டத்தில் இருந்த பெரிய மட்டைக் கிணற்றில் குளிக்கச் செல்ல வேண்டும். கிணற்றில் குளிப்பதில் எல்லோரையும் விட சிவாஜி முந்திக் கொள்வார். அவர் குளித்து முடித்து மேக்கப் போடச் சென்ற பிறகு டைரக்ஷன் டீம் குளியலுக்குக் கிளம்பும்.
ஸ்ரீதர், கோபு, சண்முகம், நானு ஆகிய நால்வரும் அன்று எடுக்கப் போகும் காட்சியைப் பற்றிப் பேசிக் கொண்டே கிணற்றை நோக்கி நடப்பார்கள். கிணற்றின் படிவழியே உள்ளே இறங்கிக் குளித்துவிட்டு மேலே வர வேண்டும். ஒரு நாள் கோபு கிணற்றின் பிரம்மாண்டத்தை எட்டிப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். குறும்புத்தனத்திற்குப் பெயர் போன சண்முகம் நானுவைப் பார்த்து கண்ணசைத்தார். அவ்வளவுதான், கோபு சற்றும் எதிர்பாராத நேரத்தில் நானு அவரை அலகேக்காகத் தூக்கிக் கிணற்றுக்குள் எறிந்தார்.
''தொபீர்' என்ற சத்தத்துடன் தண்ணீருக்குள் தலைகுப்புற விழுந்த கோபு தண்ணீருக்கடியில் போய் சடாரென்று மேலே வந்ததும் மூச்சு முட்டியது. இரண்டு மூன்று மிடறு தண்ணீரையும் குடித்துவிட்ட கோபுவுக்கு யாரோ தன் கால்களைப் பிடித்துக் கிணற்றுக்குள் இழுப்பது போன்ற ஒரு பிரம்மை. அவ்வளவுதான், நம் கதை முடிந்தது என்று நினைத்து மீண்டும் உள்ளே மூழ்க வேண்டிய நேரத்தில், கோபுவின் பின்னாலேயே கிணற்றில் குதித்திருந்த சண்முகம் அவரது தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டு, "பயப்படாதே கோபு, மூழ்கிட மாட்டே. கை கால்களை உதறிக்கிட்டே உடம்பை அசைச்சு எதிரே இருக்கிற படிக்கட்டு கல்லைப் போய் பிடி. நான் சப்போர்ட் கொடுக்கிறேன்" என்று கூறியபடியே 10 மீட்டர் விட்டம் கொண்ட அந்த மண்டைக் கிணற்றின் எதிர்ப்பக்கம் இழுத்துச் சென்று கோபுவைப் பாதுகாப்பாகப் படிக்கட்டைப் பிடிக்கச் செய்தார்.
மூச்சை நன்கு இழுத்துவிட்ட கோபு, "இதுக்கு பேர் தான் பாழுங்கிணத்துல தள்ளுறதா?" என்றார் கோபு. "இல்லை, இதுக்கு பேர் கடப்பாரை நீச்சல்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் வி.சி. சண்முகம்.
மறுநாள் யாரும் எதிர்பாராத நேரத்தில் கோபுவே கிணற்றில் 'தொபீர்' என்று குதிக்க ஸ்ரீதர், சண்முகம், நானு என எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். அதன் பிறகு சண்முகத்தின் பயிற்சியில் கடப்பாரை நீச்சலில் கைதேர்ந்தவர் ஆனார் கோபு. இந்தக் கடப்பாரை நீச்சல் சம்பவத்தை வைத்தே நடிகர் பாண்டியராஜன், ஊர்வசி தொடர்பான காட்சி ஒன்றை 'பாட்டி சொல்லைத் தட்டாதே' படத்தில் வைத்தார் கோபு.
கயிற்றுக் கட்டிலில் இரவு தூங்கும்போது கோபுவைத் தேட ஆரம்பித்து விடுவார் சிவாஜி. "ஆச்சாரி, நீதான் சிரிக்கச் சிரிக்கப் பேசுவியே, எதையாவது பேசு" என்று குழந்தையைப் போலக் கெஞ்சுவார். தனது மிமிக்ரி திறமைகளை வைத்து சிவாஜி கணேசனைச் சிரிக்க வைப்பார் கோபு. ஸ்ரீதர் உட்பட அத்தனை பேரும் சிரித்தபடி உறங்கச் செல்வார்கள். சிவாஜியோ கொஞ்ச நேரம் நினைத்து நினைத்துச் சிரித்துவிட்டுத் தூங்கிப் போவார்.
Senthilvel Sivaraj


