TamilsGuide

கலிபோர்னியா நகர சபைக்கு பேட்மேன் உடை அணிந்து வந்து புகார் கூறிய நபர் 

அமெரிக்கா - கலிபோர்னியா நகர சபைக்கு ‘பேட்மேன்’ உடை அணிந்து வந்து புகார் கூறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அடுத்த மாதம் சூப்பர் பவுல் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியின்போது, குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு(ICE) அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கலிபோர்னியா நகர நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா நகர சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு நடைபெற்றது. அப்போது அங்கு ‘பேட்மேன்’ கதாபாத்திரத்தின் உடையை அணிந்து கொண்டு ஒரு நபர் உள்ளே நுழைந்தார்.

அவர் தனது கருத்துகளை நகர சபை அதிகாரிகளிடம் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையடுத்து, அவரை பேசுவதற்கு அனுமதித்தனர் மேலும் அந்த நபர் தனது உண்மையான பெயரை கூறாமல், ‘பேட்மேன்’ என்றே தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

பின்னர் பேசிய அவர், “நாம் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம்? மத்திய அரசு நம் மீது ஏறி மிதிக்க நாம் அனுமதித்துவிட்டோம். இதனால் நாள்தோறும் வீதிகளில் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த நகர வளங்களும் குடியேற்றம் மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு செல்லாது என்பதையும், அவர்களுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கப்படாது என்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

அவரது கோரிக்கைக்கு சாண்டா கிளாரா நகர சபை நிர்வாகம் உடனடியாக எந்த பதிலையும் அளிக்கவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 2 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment