முழு பிரித்தானியாவும் ஒரு வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
பிரித்தானியாவை மையமாகக் கொண்டு செயல்படும் The Great British National Strike என்னும் அமைப்பின் தலைவரான ரிச்சர்ட் டொலால்ட்சன் (Richard Donaldson) என்னும் நபர், பிரித்தானியர்கள் அனைவரும் ஒரு வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
வேலைநிறுத்தம் என்பது அலுவலகங்களில் மட்டும் அல்ல, பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வது, மக்கள் ஷாப்பிங் செய்வது என எல்லா விடயங்களையும் ஒரு வாரத்திற்கு நிறுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் .
அந்த அமைப்பின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். இந்த வேலைநிறுத்தம், பெப்ரவரி 2ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நீடிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது என்பது, அரசியல்வாதிகள் நடிப்பது போல் உண்மையில் சிக்கலானது அல்ல என்றும், பிரித்தானியா, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரையும், மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினரையும், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் வேலையில்லாமல் இருப்பவர்களையும் நாடுகடத்தவேண்டும் என்றும் ரிச்சர்ட் டொலால்ட்சன் (Richard Donaldson) கூறியுள்ளார்.
புலம்பெயர்தலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து மீண்டும் கட்டுப்பாட்டைக் கையில் எடுக்கும் வரை புலம்பெயர்தல் விண்ணப்பங்களை பரிசீலிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அதேவேளை சட்டப்படி பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களை மதிக்கிறோம், ஆனாலும், நாங்கள் அவர்களுக்கு கடன்பட்டவர்கள் அல்ல என்றும், மருத்துவம், கல்வி, வீடுகள், பொதுசேவைகள் என அனைத்திலும் பிரித்தானியர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்றும் ரிச்சர்ட் கூறியுள்ளார்.


