இந்தோனேசியாவின் மிகவும் பழமைவாத மாகாணமான அச்சேவில், இஸ்லாமிய சரியா சட்டத்தின் கீழ் திருமணத்திற்கு புறம்பான உடலுறவு மற்றும் மது அருந்துதல் ஆகிய குற்றங்களுக்காக 21 வயதுடைய ஒரு தம்பதியினருக்கு நேற்று (வியாழக்கிழமை) பகிரங்கமாக கசையடி தண்டனை வழங்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
21 வயதுடைய அந்தப் பெண்ணுக்கு மூன்று பெண் அதிகாரிகள் மாறி மாறி பிரம்பு மூலம் கசையடி வழங்கினர்.
வலியால் கதறி அழுத அந்தப் பெண், தண்டனையின் ஒரு கட்டத்தில் மூர்ச்சையடைந்து கீழே விழுந்தார்.
உடனடியாக அவர் பெண் அதிகாரிகளால் மேடையிலிருந்து அகற்றப்பட்டு அவசர சிகிச்சை வாகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அச்சே மாகாண சட்டத்தின்படி, திருமணத்திற்கு புறம்பான உடலுறவிற்கு 100 கசையடிகளும், மது அருந்தியமைக்காக 40 கசையடிகளும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் குறித்த தம்பதியினருக்கு மொத்தமாக 140 கசையடிகள் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதே மேடையில் இஸ்லாமிய மத காவல்துறை அதிகாரி ஒருவரும், அவரது பெண் தோழியும் தனியான இடத்தில் நெருக்கமாக இருந்த குற்றத்திற்காக தலா 23 கசையடிகளைப் பெற்றனர்.
குறித்த அதிகாரி தனது பதவியிலிருந்து நீக்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இஸ்லாமிய சரியா சட்டத்தை அமுல்படுத்தும் ஒரே மாகாணம் அச்சே ஆகும்.
இங்கு சூதாட்டம், மதுப்பாவனை மற்றும் முறையற்ற உறவுகள் போன்ற குற்றங்களுக்குப் பகிரங்கமான கசையடி ஒரு பொதுவான தண்டனையாகக் காணப்படுகிறது.
எவ்வாறாயினும், மனித உரிமை அமைப்புகள் இத்தகைய தண்டனைகள் குரூரமானவை மற்றும் மனிதநேயமற்றவை எனத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்தத் தண்டனை முறைகள் சீரமைக்கப்பட வேண்டும் எனவும், தண்டனைக்கு உள்ளானவர்களின் உடல் மற்றும் மனநிலை குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


