TamilsGuide

காவல்துறையதிகாரி வேடத்தை ஏற்கத் துணிந்தார்

இன்றைய காலகட்டத்தில், திரைத்துறைக்கு வந்தவுடனேயே ஆளாளுக்கு நடிக்க வந்தால் (வாய்ப்பு கிடைத்தால்), காவல்துறை உயரதிகாரி பாத்திரத்தை ஏற்கும் அவசரத்தைக் காண்கிறோம். ஆனால், 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவர்கள், நடிக்கத் தொடங்கி இருபத்தி இரண்டு ஆண்டுகள் தவம் இருந்து, நூற்றுக்கணக்கான பாத்திரங்களில் தன்னைச் செதுக்கிக் கொண்ட பின்னரே, ஒரு முழுநீள காவல்துறையதிகாரி வேடத்தை ஏற்கத் துணிந்தார்.

இதற்கு முன்னால் ‘ஸ்கூல் மாஸ்டர்’ படத்தில் கௌரவ வேடத்திலும், ‘ராஜா’ படத்தில் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே போலீஸாகவும் வந்து சென்றிருப்பார். நவராத்திரி பார்ட் டைம் ஜாப் போலே..அந்தச் சிறு கணங்களில்கூட அவரது அர்ப்பணிப்பும், சிரத்தையும் அசாத்தியமாகத் தென்பட்டன.

பல நடிகர்கள் காவல்துறையதிகாரியாக நடிக்கும்போது, திரையில் அழகாகத் தெரிவதற்காக எக்கச்சக்கமான தலைமுடி, நவீன ‘ஸ்டெப் கட்’ மற்றும் அடர்த்தியான கிருதாக்களுடன் வலம் வருவார்கள். ஆனால், நடிகர் திலகம் ஒருபோதும் வியாபார காரணங்களுக்காகத் தனது கலைத்தன்மையை அடகு வைத்ததில்லை. ஒரு நிஜமான அதிகாரியின் தோற்றத்தைப் பிரதிபலிக்க, ஒட்ட வெட்டிய ‘கிராப்’ மற்றும் நேர்த்தியான மீசையுடன் அவர் காட்சியளித்தார்.

‘தங்கப்பதக்கம்’ வெளியான சில மாதங்களிலேயே வெளிவந்த ‘என் மகன்’ படத்தில் முற்றிலும் வேறொரு போலீஸ் பரிமாணத்தைக் காட்டினார். ‘வெள்ளை ரோஜா’, ‘தீர்ப்பு’, திருப்பம் என ஒவ்வொரு படைப்பிலும் அவர் காட்டிய அந்த ஒப்பனை வேறுபாடுகள், அவர் ஒரு ‘நடிப்பு அசுரன்’ என்பதைப் பறைசாற்றின.

இப்படத்தின் சிறப்புத் திரையிடலுக்கு அப்போதைய தமிழகத் தலைமை காவல்துறையதிகாரி ஐஜி அருள் அவர்களும், பல மூத்த அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். படம் முடிந்ததும் சிலிர்த்துப் போன ஐஜி அருள் அவர்கள், “தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை காவல்துறையதிகாரிகளும், ஊழியர்களும் இந்தப் படத்தைப் பார்த்து பாடம் கற்க வேண்டும்” என்று முழங்கினார். இது ஒரு கலைஞனின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த ஆகச்சிறந்த மகுடம்.

சௌத்ரி எனும் பாத்திரத்தின் அந்த அதிரடியான உடல்மொழிக்கு ஒரு நிஜமான அதிகாரிதான் ஆணிவேராக இருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்னால் ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது, திரண்டிருந்த பெரும் கூட்டத்தைத் தனது தனித்துவமான பாணியில் கட்டுப்படுத்திய உயர் அதிகாரி தேவாரம் அவர்களைச் சில நிமிடங்கள் மட்டுமே பார்த்திருந்தார் சிவாஜி.

அந்தச் சில நிமிடத் துளிகளில் தேவாரத்தின் உடல்மொழியையும், ஒப்பனையையும் தனது கூர்மையான கலைக் கண்களால் உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம், பல ஆண்டுகள் கழித்து அதைச் சௌத்ரியாக உருமாற்றினார். இதைக் கண்ட தேவாரத்திடம், “இது உங்களை வைத்துத்தான்” என்று சிவாஜி சொன்னபோது, வியப்பின் உச்சத்திற்கே சென்றார்.

“நேரில் சராசரி உயரமாக இருக்கும் நீங்கள், திரையில் மட்டும் எப்படி இமயமாகத் தெரிகிறீர்கள்?” என்று இயக்குநர் மகேந்திரன் கேட்டபோது, அந்த மேதை மிகச் சாதாரணமாகப் பதிலளித்தார்:

“நான் ஒரு பாத்திரத்தை ஏற்கும்போது அந்தப் பாத்திரமாகவே வாழ்கிறேன். ‘கௌரவம்’ பாரிஸ்டர் ரஜினிகாந்தாக நான் நெஞ்சை நிமிர்த்தி, சுயமரியாதை மிக்கவனாகத் திரையில் நிற்கும்போது, அந்த உணர்வே என்னை உயரமாகக் காட்டுகிறது. இப்போதும் அப்படித்தான்!”

மீண்டும் கேமரா ஓடத் தொடங்கியபோது, மகேந்திரன் கண்டது அதே உயரமான சௌத்ரியைத்தான்! “இது ஒரு கண்கட்டு வித்தையோ?” என்று அவர் அன்று வியந்தது இன்றும் தொடர்கிறது.

தங்கப்பதக்கத்தின் கதை பிற மொழிகளிலும் சென்றது:

தெலுங்கு: என்.டி. ராமாராவ் ‘கொண்டவீட்டி சிம்மம்’ படத்தில் தந்தை-மகன் என இரு வேடங்களில் நடித்து, ஸ்ரீதேவியுடன் டூயட் பாடி, சில வணிக சமரசங்களைப் புகுத்தி அசலின் ஆன்மாவைச் சிதைத்தார்.

* இந்தி: ‘சக்தி’ படத்தில் திலீப் குமாரும் அமிதாப் பச்சனும் இணைந்தும் கூட, அமிதாப்பின் அன்றைய பிம்பம் எதிர்மறைப் பாத்திரத்திற்குப் பொருந்தாததால் படம் வெற்றி பெறவில்லை.

ஆனால், தமிழில் மட்டும் இது எப்படிச் சாத்தியமானது? ஏனெனில், நடிகர் திலகம் ‘இமேஜ்’ எனும் மாய வலைக்குள் ஒருபோதும் சிக்கியதில்லை. மகனாக நடித்த ஸ்ரீகாந்தின் அசாத்தியமான எதிர்மறை நடிப்பும், சிவாஜியின் எதார்த்தமான அணுகுமுறையுமே இப்படத்தைத் திரையுலகின் ‘தங்கப்பதக்கமாக’ மாற்றியது.

செந்தில்வேல் சிவராஜ்.

Leave a comment

Comment