TamilsGuide

அறுவை சிகிச்சை செய்யாததால் ஏற்பட்ட சிக்கல்- 3 நாட்களில் நடக்க வைத்த சிகிச்சை பற்றி அரவிந்த் சாமி பகிர்வு

18 மாத காலம் படுக்கையில் வீழ்ந்த நிலை, அறுவை சிகிச்சை செய்யாததால் ஏற்பட்ட சிக்கல்; 3 நாட்களில் நடக்க வைத்த சிகிச்சை பற்றி அரவிந்த் சாமி பகிர்வு.

திரையுலகில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி தற்போது வில்லன் - ஹீரோ என பயணித்து வரும் நடிகர் அரவிந்த் சாமி, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம் மற்றும் விபத்தை சந்தித்தபோது ஏற்பட்ட போராட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. விளம்பர படங்களில் நடித்தன் மூலம் தளபதி பட வாய்ப்பை பெற்ற இவர், அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் 'ரோஜா', 'பம்பாய்' போன்ற திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பான் இந்தியா ஹீரோவாக பிரபலமானார். புகழின் உச்சியில் இருந்தபோதே திரையுலகை விட்டு ஒதுங்கிய அவர், சமீபத்தில் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் (IFFM) தனது வாழ்க்கையின் இருண்ட பக்கத்தைப் பற்றி மனம் திறந்துள்ளார்.

2005-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில், தண்டுவடக் காயம் (Spinal Injury) அரவிந்த் சாமியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. இதனால் அவர் ஒரு பக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையானார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர் அனுபவித்த உடல் மற்றும் மன ரீதியான வேதனைகள் விவரிக்க முடியாதவை. அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டாம் என்று நான் எடுத்த முடிவால்தான் ஒன்றரை ஆண்டுகள் அந்த வலியைச் சுமந்தேன்," என்று அவர் கூறியுள்ளார்.

இந்த காயத்திற்காக அனைத்து மருத்துவ முறைகளையும் முயன்று பார்த்த அரவிந்த் சாமி, கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத மருத்துவரின் சந்திப்பு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை அலோபதி மருத்துவத்தையே நம்பியிருந்த அரவிந்த் சாமிக்கு, ஆயுர்வேதம் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்தது. ஆயுர்வேத சிகிச்சை தொடங்கிய 3-வது நாளிலேயே அவர் நடக்கத் தொடங்கினார். ஆயுர்வேதத்தில் உள்ள "பழங்கால ஞானம்" தனக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம் இது எனது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே. இதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை. உங்களை கவனிக்கும் மருத்துவர்களின் அறிவுரையை மட்டுமே நீங்கள் பின்பற்ற வேண்டும்," என்று அவர் தெளிவுபடுத்தினார். இந்த 18 மாத கால போராட்டத்தை ஒரு உடல் ரீதியான பிரச்சனையாகப் பார்க்காமல், ஒரு மன ரீதியான சவாலாகவே எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள அரவிநத் சாமி, வலி மற்றும் நடமாட முடியாத சூழலைத் தாங்கும் சக்தி நம் மனதில்தான் இருக்கிறது. அந்த நேரத்தில் "ஏன் எனக்கு இப்படி நடந்தது?" என்று ஒருபோதும் நான் வருந்தியதில்லை. மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க செஸ், பஸில்ஸ் மற்றும் போர்டு கேம்களை விளைாடினேன். இதன் மூலம் ஒரு நாளைச் சோர்வின்றி கடக்க முடிந்தது என்று கூறியுள்ளர்.

ஒரு கட்டத்திற்கு பிறகு, உடல்நிலை தேறிய அரவிந்த், தனது குழந்தைகளுக்காக நேரத்தைச் செலவிட விரும்பியுள்ளார். ஆனாலும் அவரை அறிமுகம் செய்த இயக்குனர் மணிரத்னம் தான் இயக்கிய கடல் படத்தில் மீண்டும் அவரை நடிக்க வைத்து அரவிந்த் சாமியின் ரீ-என்ட்ரிக்கும் காரணமாக இருந்தார். இது குறித்து பேசிய அவர், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை. மருந்துகள் உட்கொண்டதால் உடல் எடை அதிகரித்திருந்தது, தலைமுடி உதிர்ந்திருந்தது. நான் தயாராக இல்லை என்று அவரிடம் சொன்னேன்.

அந்த சமயத்தில் மணிரத்னத்தின் ஊக்கத்தால் உடல் மற்றும் மன ரீதியாகத் என்னைத் தயார்படுத்திக்கொண்டு 'கடல்' படத்தில் நடிக்க உதவியது என்று கூறியுள்ளர். கடல் படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், அரவிந்த் சாமியை மீண்டும் வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்தது. தற்போது அவர் 'காந்தி டாக்ஸ்' (Gandhi Talks) என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்று மீண்டும் ஒரு வெற்றிகரமான நடிகராகத் திகழும் அரவிந்த் சாமியின் பயணம் பலருக்கும் ஒரு சிறந்த உத்வேகம் என்று சொல்லலாம்
 

Leave a comment

Comment