பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் இன்று செவ்வாய்க்கிழமை நேற்று (27) வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் குடியேற்றக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.
புதிய தங்குமிட அனுமதிகள் அதிகரித்துள்ள அதே வேளையில், ஏற்கனவே சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்களை முறைப்படுத்தும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தங்குமிட அனுமதியில் ஏற்றம்: கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் பிரான்ஸ் அரசு 3,84,230 பேருக்குப் புதிய தங்குமிட அனுமதிகளை (Titres de séjour) வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 11.2% அதிகமாகும்.
மாணவர்களே முதலிடம்: அதிகபட்சமாக 1,18,000 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள்: மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதிகள் 65% உயர்ந்து, 92,600 ஆகப் பதிவாகியுள்ளது.
வேலைவாய்ப்பில் சரிவு: மாறாக, பொருளாதாரக் காரணங்களுக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் வழங்கப்படும் அனுமதிகள் 13% குறைந்துள்ளன. குறிப்பாகப் பருவகாலப் பணியாளர்களுக்கான (Saisonniers) அனுமதி 30% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆவணங்களை முறைப்படுத்துவதில் கெடுபிடி: சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றித் தங்கியிருந்தவர்களுக்கு, ஆவணங்கள் வழங்கி முறைப்படுத்தும் நடவடிக்கை (Régularisations) 10.1% குறைந்துள்ளது. ஜனவரி 2025-ல் வெளியிடப்பட்ட 'ரெட்டைய்லோ சுற்றறிக்கை' (Circulaire Retailleau) இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. "விதிவிலக்கான சூழலில் மட்டுமே ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும்" என்று அந்தச் சுற்றறிக்கை நிபந்தனைகளைக் கடுமையாக்கியதால், பொருளாதார மற்றும் குடும்பக் காரணங்களுக்காக ஆவணங்கள் பெறுவது கடினமாகியுள்ளது.
கைது மற்றும் நாடு கடத்தல் அதிகரிப்பு: முறையான ஆவணங்கள் இன்றித் தங்கியிருந்தவர்களைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டில் 30% அதிகரித்துள்ளன. இதில் அல்ஜீரியா (+52%), துனிசியா (+33%) மற்றும் மொராக்கோ (+19%) நாட்டினரே அதிகம் சிக்கியுள்ளனர். நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 24,985 (15.7% உயர்வு). இதில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள் (Éloignements forcés) மட்டும் 21% அதிகரித்து, 15,569 ஆகப் பதிவாகியுள்ளது.
தஞ்சம் கோருவோர் நிலவரம்: தஞ்சம் கோரும் விண்ணப்பங்களின் (Demandes d'asile) எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது (-3.7%). உக்ரைன், காங்கோ மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் (தலா 11,500 விண்ணப்பங்கள்) தஞ்சம் கோரியுள்ளனர்.
பிரெஞ்சு குடியுரிமை பெறுவதில் சரிவு: இறுதியாக, கடந்த ஆண்டில் 62,235 பேர் பிரெஞ்சு குடியுரிமை (Nationalité française) பெற்றுள்ளனர். மே மாதத்தில் கொண்டுவரப்பட்ட கடுமையான விதிமுறைகளால், இது முந்தைய ஆண்டை விட 6.8% குறைந்துள்ளது


