கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள நீச்சல் குளம் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு திடீரென உடல் நல பாதிப்பும் வாந்தியும் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு உருவானது.
ஞாயிற்றுக்கிழமை காலை, ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள Canmore என்னுமிடத்தில் அமைந்துள்ள நீச்சல் குளம் ஒன்றில் பெற்றோர் மேற்பார்வையில் பிள்ளைகள் பலர் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
சிறிது நேரத்தில் திடீரென பல பிள்ளைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது, சிலர் வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக அவசர உதவியை அழைத்துள்ளனர்.
மருத்துவ உதவிக்குழுவினர் அங்கு விரைந்தபோது, 30 பிள்ளைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, 11 பிள்ளைகள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேருடைய நிலைமை சீராக இருப்பதாகவும், ஒரு பிள்ளையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த பகுதியில் தீயணைப்பு வீரர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு ஒரு ரசாயனப்பொருளின் அளவு காற்றில் அதிகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அது குளோரினாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அந்த நீச்சல் குளத்தின் அருகே என்ன நடந்தது என்பதை அறிவதற்காக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.


