சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, திரிப்டி டிம்ரி ஆகியோர் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த படம் அனிமல். விமர்சனரீதியாக பெரிதும் பாரட்டுகளை பெறாவிட்டாலும், வசூல்ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 2023ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் ரன்பீர் கபூர் பேசியுள்ளார். டெட்லைன் ஹாலிவுட்-இல் இதுகுறித்து பேசிய அவர், 'அனிமல் பார்க்' எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டாம் பாகம் படப்பிடிப்பு 2027-ஆம் ஆண்டில் தொடங்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். இதில் ரன்பீர் கதாநாயகன், வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும், முதல் பாகத்தின் இறுதியில் காட்டப்பட்டது போல, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் கதாநாயகனைப் போலவே வில்லன் மாறுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அனிமல் படத்தை மூன்று பாகங்களாகக் கொண்டுவரும் திட்டத்தில் சந்தீப் வங்கா இருப்பதாகவும் ரன்பீர் தெரிவித்துள்ளார். படத்தின் வன்முறை மற்றும் பெண் வெறுப்பு தொடர்பான முந்தைய விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "அனிமல் திரைப்படம் சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கியுள்ளது" என்றும், ஒரு நடிகராகப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


