ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது -வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்
இலங்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்தான். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசியக் கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. எனவே, ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்றைய தினம் கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
‘நேர்மையான தேசத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அரச சேவையில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையானவையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்த்து எங்கள் சேவைகள் அமையக் கூடாது. நேர்மையின்றிய தொழிற்பாடு சேவையாகக் கருதப்படாது.
மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுடன் பின்னிப்பிணைந்த அரச நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி மன்றங்களாகும். எனவே, இப்பிரதிநிதிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தெளிவான அறிவு அவசியம். சில சந்தர்ப்பங்களில் ‘அன்பளிப்பு’ என்ற பெயரில் வழங்கப்படும் பொருட்கள் கூட இலஞ்சமாகவே கருதப்படும் என்பதைப் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதேவேளை, வவுனியா மாநகர சபை மண்டபத்தில் -வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு நாளை மறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















