தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் கட்டுப்பாடு திடீரென செயலிழந்த நிலையில், சாரதி மேற்கொண்ட துரிதமான நடவடிக்கையினால் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று திடீரென பிரேக்குகளின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனையடுத்து சாரதி துரிதமாக செயற்பட்டு ஒரு மண் மேட்டில் குறித்த பேருந்தை மோதியுள்ளார்.
இதனால், பேருந்து முன்னோக்கிச் செல்ல முடியாது நின்றுள்ளதாக கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள கினிகத்தேனை கடவல பகுதியில் உள்ள மஹா வாங்குவா பகுதியில் இன்று (26) அதிகாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
குறித்த வளைவில் செல்ல முயன்றபோது, பேருந்தைக் கட்டுப்படுத்த இரண்டாவது கியரை மாற்றியதாகவும், அந்த நேரத்தில் பேருந்தின் பிரேக்கிங் கட்டுப்பாடு செயலிழந்ததால், பிரேக்குகளைப் பயன்படுத்தி ஒரு சாய்வான பகுதியில் உள்ள ஒரு மலையில் மோதி அதனை நிறுத்தியதாகவும் அதன் சாரதியான 49 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான மகேஷ் சுதர்சன் தெரிவித்தார்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 80 பயணிகள் இருந்தனர்.
சம்பவத்தின் பின்னர் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் அந்த பயணிகளை வேறொரு பஸ்ஸில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.
விபத்து குறித்து கினிக்கத்தேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணிப்பின் பேரில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


