TamilsGuide

கனடாவில் ஈழத்து இசை நாயகர்களுக்கு கிடைத்த கௌரவம் - வேல் வழங்கிப் பாராட்டிய அமைச்சர் 

கனடாவின் டொரன்ரோ நகரில் அமைந்துள்ள டூறம் மாநாட்டு மண்டபத்தில் (Durham Convention Centre), அன்று 'எங்கட பெடியள்' என்ற கருப்பொருளில் மாபெரும் கலை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது.

இதன் போது இலங்கையின் வளர்ந்து வரும் இசைக்கலைஞரான ரெப் பாடகர் வாகிசன் உள்ளிட்ட குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 'வாகீசன் லைவ் இன் டொரன்ரோ' (Vaheesan Live in Toronto) இசைச் சங்கமம், உலகத்தமிழர்களை இசையாலும் உணர்வாலும் ஒன்றிணைக்கும் ஒரு வரலாற்றுப் பாலமாக அமைந்திருந்தது.

இக்கலைவிழாவில், 'சிலோன் ராப்' சொல்லிசைக் கலைஞர்களின் பங்களிப்பும் அவர்களின் ஆழமான தமிழ்ப்பற்றும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஒன்ராறியோ மாநில சுகாதார இணை அமைச்சரும், ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் அவர்கள், சொல்லிசைக் கலைஞர்களை நேரில் பாராட்டி கௌரவித்ததுடன் ஒவ்வொரு கலைஞரின் தனித்துவத்திற்கும் ஏற்ப பெறுமதிமிக்க நூல்களை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வின் மிக முக்கிய சிறப்பம்சமாக, பாடகர் வாகீசனுக்கு ஒரு 'வேல்' பரிசாக வழங்கப்பட்டது. வாகீசனை எதிர்காலத்தின் ஒரு சிறந்த தலைமையாகக் கருதுவதாகவும், அதன் அடையாளமாகவே இந்த வேலை அவருக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் டொறன்ரோவில் அமையவிருக்கும் தமிழ் சமூக மையத்திற்காக ஒரே இரவில் ஒரு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது.  உலகளாவிய தமிழ்ச் சூழலில், புலம்பெயர் தமிழ் மக்களால் கட்டப்படும் முதலாவது தமிழ் சமூக மையம் இது என்பதால், எமது எதிர்கால சந்ததியினருக்காக ஒரு நிரந்தரமான இடத்தை உருவாக்கித் தரும் வரலாற்றுப் பொறுப்பை ஏற்று தமிழ்ச் சமூகம் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது.

இந்த விழா டொரன்ரோ வாழ் தமிழ் மக்களிடையே பெரும் எழுச்சியையும், இளம் சொல்லிசை கலைஞர்களுக்கான கௌரவத்தையும் ஒருசேர வழங்கிய ஒரு வரலாற்று நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.
 

Leave a comment

Comment