அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு பென்குயினுடன் கிரீன்லாந்து (Greenland) நோக்கி நடந்து செல்வது போன்ற ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டதை அடுத்து, இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அந்தப் படத்தில், பென்குயின் அமெரிக்கக் கொடியை ஏந்திச் செல்கிறது. பின்னணியில் உள்ள மலைகளில் கிரீன்லாந்தின் கொடி வரையப்பட்டுள்ளது.
அதற்கு கீழே பென்குயினை அரவணைப்போம் ("Embrace The Penguin") என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
இந்தப் படம் வெளியான சில நிமிடங்களிலேயே இணையவாசிகள் வெள்ளை மாளிகையை கடுமையாகக் கேலி செய்யத் தொடங்கினர்.
அதற்குக் காரணம், கிரீன்லாந்தில் பென்குயின்கள் இயற்கையாக வாழ்வதில்லை. பென்குயின்கள் தென் அரைக்கோளத்தில் மட்டுமே காணப்படுபவை.
ஆனால், கிரீன்லாந்து வட அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. அங்கு துருவக் கரடிகளே வாழ்கின்றன.
வெள்ளை மாளிகையின் இந்தப் பதிவில் இருந்த புவியியல் பிழையைச் சுட்டிக்காட்டி, பலரும் மீம்ஸ்களைப் பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.


