TamilsGuide

முன்பள்ளி கல்வி முறையில் அரசாங்கம் எடுக்கும் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

காரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

பிள்ளையார் சனசமூக நிலையம் மற்றும் அம்பாள் முன்பள்ளி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில், சனசமூக நிலையத் தலைவர் நா.பாலகிருஷ்ணன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

விருந்தினர்கள் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய கட்டடத்துக்கான பெயர்ப்பலகையை வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ஆகியோர் இணைந்து திரைநீக்கம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து நாடா வெட்டி கட்டடம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மாணவர்களின் வரவேற்பு நடனம், பிள்ளையார் நடனம், கும்மி நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் வருகை தந்தோரை வெகுவாகக் கவர்ந்தன.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், கௌரவ விருந்தினர்களாக காரைநகர் பிரதேச செயலாளர் ஞ்சனா நவரத்தினம்,  தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திருஞானசம்பந்தன் ஞானச்சந்திரன், காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர்  கிருஷ்ணன் கோவிந்தராஜன், தீவக வலயக் கல்வி (முன்பள்ளிகள்) உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவசுப்பிரமணியம் பவானந்தன் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.கே.சதாசிவம் , பெற்றோர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

107 பேரின் 142 லட்சம் ரூபா பங்களிப்பில் இந்த முன்பள்ளிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.ஜபிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதில் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். இத்திட்டம் முழுமையடையும்போது முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் முன்பள்ளிக் கல்வியே முக்கிய பங்காற்றுகின்றது. அதுவே சிறந்ததொரு எதிர்காலச் சமூகத்துக்கான அத்திவாரமுமாகும். பெற்றோர்கள் பாடங்களைக் கற்பிக்கும் இடங்களை விட, நல்ல பழக்கவழக்கங்களைப் போதிக்கும் இடங்களிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும். சிறுபராயத்தில் அவர்கள் பழகும் நற்பண்புகளே அவர்களைச் சமூகத்தில் சிறந்தவர்களாக வழிநடத்தும்.

இலங்கையில் முன்பள்ளிகள் வெவ்வேறு கற்பித்தல் முறைகளைக் கொண்டுள்ளன. இதனைச் சீர்படுத்தி, ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு மாகாண சபையால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதாது என்பதை நான் அறிவேன். தற்போதைய நிலையில் அதனை உடனடியாக அதிகரிக்க முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் அரசாங்கம் இதனை ஒரு நிரந்தரக் கட்டமைப்புக்குள் கொண்டு வரும்போது இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும்.

1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இம்முன்பள்ளி, இன்று மக்களின் பங்கேற்புடன் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் எப்போதும் நிலைத்து நிற்கும். காரைநகர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதேசத்தில், நவீன வசதிகளுடன் கூடிய இக்கட்டடம் அமைந்தமை மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். முன்பள்ளியின் எஞ்சியுள்ள தேவைகளை மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Leave a comment

Comment