TamilsGuide

அமெரிக்க இராணுவத்தில் இணைகிறது மிகவும் அபாயகரமான போர் விமானம்

எதிரிகளின் ரேடாரில் சிக்காத, 'மிகவும் அபாயகரமான' போர் விமானம் என்று கூறப்படும், 'எப்-47' விரைவில் அமெரிக்க ராணுவத்தில் இணைய உள்ளது.

அமெரிக்கா தன் ராணுவ பலத்தை மேம்படுத்த, பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. இதேபோன்று கடற்படை, விமானப்படைகளிலும் அதிநவீன கப்பல்கள், விமானங்களை தயாரித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, எப் - 47 என்ற ரேடாரில் சிக்காத ஆறாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை, 'போயிங்' நிறுவனம் பெற்றது. இதன் முதல் போர் விமானம், விரைவில் அமெரிக்க விமானப் படைக்கு கிடைக்க உள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்த விமானத்தின் வடிவமைப்பு, முதன்மை இறக்கைகள் மற்றும் காக்பிட் அருகே, 'கனார்ட்' எனப்படும் சிறிய இறக்கைகளுடன் கூடியதாக உள்ளது.

இவை கூர்மையான திருப்பங்கள், தாக்குதலின் போது விமானத்தின் சமநிலை, முன்-பின் சாய்வு கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு பயன் படுகின்றன. இது, நீண்ட துார பயணத்துக்கு ஏற்ற திறன் பெற்றுள்ளது.

ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 1,800 கி.மீ., சுற்று துாரத்தை தங்கு தடையின்றி அடையும். மணிக்கு 2,500 கி.மீ வேகத்தில் எப் - 47 பறக்கும் திறன் உடையது. மேம்பட்ட தொலை துார மற்றும் குறுகிய துார ஏவுகணைகள், ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் ஆகியவை இதில் இணைக்க முடியும்.

இதில் இணைக்கப்பட உள்ள ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தாமாகவே முடிவெடுத்து செயல்படும் திறன் கொண்டவை. 

இந்த விமானங்களின் தயாரிப்பு துவங்கியுள்ள நிலையில், 2030ம் ஆண்டுக்குள் விமானப்படையில் முழுதும் இணையும் என எதிர்பார்க் கப்படுகிறது. 
 

Leave a comment

Comment