அமேசான் நிறுவனத்தில் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் அமேசான்.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் உள்ளது. பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு தாக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்தவகையில் சமீப காலமாக அமேசான் நிறுவனமும் ஆட்குறைப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு காரணங்களை கூறி சுமார் 27,000 ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி சுமார் 14,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டன.
இந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் 30 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத வகையில், மொத்தம் 30,000 கார்ப்பரேட் பணியிடங்களை ரத்து செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில், வரும் 27ம் தேதி முதல் சுமார் 14,000 முதல் 16,000 வரையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது.
அமேசான் வெப் சர்வீசஸ், ரீடைல், பிரைம் வீடியோ மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகளையும் சாப்ட்வேர் இன்ஜினியர் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


