TamilsGuide

யுத்த காலத்தில் மீட்கப்பட்ட தமிழர்களின் தங்க நகைகளை கேட்கும் சிறிதரன் எம்பி

இறுதி யுத்த காலத்தில் மீட்கப்பட்ட தமிழர்களின் தங்க நகைகளை அவர்களிடம் ஒப்படைப்பதாக தற்போதைய ஆளுங்கட்சி மக்களுக்கு வாக்குறுதியளித்ததாகவும், அதனை நிறைவேற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும்  தெரிவிக்கையில், 

தமிழர்களின் மீட்கப்பட்ட தங்க நகைகளை அவர்களிடம் ஒப்படைப்பதாக 2024 ஆண்டு ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் காலங்களில் தற்போயை ஆளும் கட்சி பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தது.

தேர்தல்கள் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் இருக்கும் தமிழ் மக்களுக்கு எந்த மகிழ்ச்சியான செய்தியும் இதுவரை கிடைக்கவில்லை.

தங்களின் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் மனநிலையை இந்த அரசு மனிதாபிமானத்தோடு கரிசனை கொள்ளுமா? வடக்குக் கிழக்கில் இவ்வாறு தமிழ் மக்களிடம் எடுக்கப்பட்ட தங்கநகைகள் எத்தனை கிலோ பவுண்?

நீண்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இம்மக்களின் தங்க நகைகள் எப்போ அவர்களிடம் மீள வழங்கப்படும்? இந்த தங்க நகைகளை மீள அம்மக்களிடம் ஒப்படைப்பதற்கான ஏதாவது ஒரு வேலைத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதா?

மொத்தமாக வடக்கு, கிழக்கில் இவ்வாறு தமிழீழ வைப்பகத்தில் தங்கநகைகளை அடகு வைத்தோரின் விபரங்களையாவது உங்கள் அரசுமேற்கொண்டு வெளியிடுமா?

தங்களுடைய தேர்தல் கால வாக்குறுதிகளில் இத்தங்க நகை விடயம் முக்கியத்துவம் பெறுவதால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க தாங்கள் எடுத்துள்ள துரித நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு வாரகால அவகாசம் தேவையென அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  இதன்போது சிறிதரனுக்கு  பதில் வழங்கினார்.
 

Leave a comment

Comment