திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வானது நேற்று (23) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
உழவுத் தொழிலின் உன்னத தன்மையை இந்நிகழ்வு பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.
உழவர்கள் தம் வயலில் விளைந்த நெல்லை முதன் முதலில் சமைத்து உண்ணும் சடங்கான “புதிர் எடுத்து பொங்கல் வைத்தல்” நிகழ்வுடன் உழவர்களின் தோழனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோ – பூஜையும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய அம்சங்களை வெளிக்கொணரும் வகையில் இப் பொங்கல் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தைப்பொங்கல் விழாவின் ஊடாக விவசாய மரபுகளையும், தமிழர் பண்பாட்டு விழுமியங்களையும் இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கியத்துவம் இந்நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


